Breaking News :

Thursday, November 21
.

திருமலை திருப்பதியில் இலவசம் என்ன?


திருப்பதி பஸ்-ஸ்டாண்டின் எதிர்புறம் இருக்கும் சீனிவாசன் காம்ப்ளக்ஸில் இலவசக் குளியலறைகள், கழிவறைகள் உள்ளன. இவை தவிர நமது லக்கேஜ் பையை வைக்க, இலவச லாக்கர்களும் உள்ளன. அதில் நாம் கொண்டு போன லக்கேஜ்களை வைத்துவிட்டு, அங்கிருக்கும் ஹாலில் ஓய்வெடுக்கலாம். இரவு நேரம் என்றால் அங்கேயே படுத்து உறங்கலாம். சுத்தமாகவும் சிறப்பாகவும் அவை பராமரிக்கப்படுகின்றன. கீழ்த் திருப்பதியிலிருக்கும் கோவிந்தராஜ சுவாமி கோயில், அலமேலு மங்காபுரம் ஆகிவற்றுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம்.

ரயிலில் வருபவர்களுக்கு வசதியாக ரயில் நிலையம் எதிரிலிருக்கும் விஷ்ணு நிவாஸத்திலும் இதே போல் வசதிகள் உள்ளன.

கீழ்த் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்துசெல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக அலிபிரிக்கும், ஶ்ரீவாரிமெட்டுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இலவச பஸ் வசதி உண்டு.  

திவ்ய தரிசனம் செய்ய, நடந்தே மலையேறி வருபவர்களுக்கு வசதியாக அவர்கள் கொண்டுவரும் லக்கேஜ்களை இலவசமாகக் கொண்டு செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லட்டு ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.

திருமலையில் பக்தர்களின் வசதிக்காக பல இடங்களிலும் இலவச லாக்கர் வசதி உண்டு. இதில் நம் லக்கேஜ்களை வைத்துச் செல்லலாம். ஆனால், மிகவும் காஸ்ட்லியான நகைகள், அளவுக்கு அதிகமான பணம் இவற்றைத் தொடக்கத்திலேயே தவிர்த்துவிடுங்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் இருக்கும் இலவசக் கழிப்பறைகள், பக்தர்கள் காலைக் கடன்களை முடிக்க எளிதாக உதவக்கூடியவை.

உங்களின் செல்போன், காலணிகளைப் பாதுக்காப்பாக வைப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அங்கு வைத்து டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.

'கல்யாணக்கட்டா'  என்று சொல்லப்படும் முடிக்காணிக்கை செய்யும் இடத்தில் முடிக்காணிக்கைக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. இங்கு சந்தனம் மற்றும் புதிய பிளேடு ஒன்று இலவசமாக வழங்கப்படும்.

சர்வதரிசன க்யூவில் சென்று சுவாமி தரிசனம் செய்தால்,  தரிசனம் செய்ய எந்தக் கட்டணமும் கிடையாது. செவ்வாய், புதன்கிழமைகளில் கூட்டம் மிகவும் குறைவாக இருக்கும். தரிசனத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் பொங்கல், சாம்பார் சாதம், உப்புமா இவற்றில் ஏதேனும் ஒன்று இலவசமாக  வழங்கப்படும். சிலவேளைகளில் பசும்பால் வழங்கப்படும்.

தரிசனம் முடித்து வரும் அனைவருக்கும் சிறிய லட்டு பிரசாதம் வழங்கப்படும். இல்லாவிட்டால், பொங்கல், புளியோதரை, மிளகு சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும்.

கோயிலின் பிரதான வாசலைத் தாண்டி வெளியே வந்தால்,  தரிகொண்டா வெங்கமாம்பா இலவச அன்னதானக்கூடம் இருக்கிறது. இங்கு வேண்டுமளவு சாதம் சாம்பார், ரசம், மோர், பொரியல் துவையலுடன் இலவசச் சாப்பாடு வழங்கப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி மலை முழுவதும் சுற்றி வர, இலவச பஸ் ஆரஞ்சு நிறத்தில் ரதம்போல பவனி வருகின்றது. ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு பஸ் என காலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரை மலையைச் சுற்றி வருகிறது. இதில் ஏறி நாம், திருமலையில்  எந்த இடத்தில் இறங்க வேண்டுமோ அங்கு இறங்கிக் கொள்ளலாம்.

இது தவிர இலவச மருத்துவமனை ஒன்றும் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.