Breaking News :

Thursday, November 21
.

திருமேற்றளீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, பிள்ளையார்பாளையம்.

இங்கு ‘திருமேற்றளீஸ்வரர் கோவில்’ இருக்கிறது.

இந்த ஆலயம் ‘திருக்கச்சிமேற்றளி’ என்றும் அழைக்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து பாடல்பெற்ற தலங்களில்
(திருக்கச்சியேகம்பம், திருக்கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக் காரைக்காடு) இதுவும் ஒன்று.

சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் இது 234-வது தேவாரத் தலமாகும். அதே போல் தொண்டை நாட்டு தலங்களில் 2-வது தலமாகவும் போற்றப்படுகிறது.
இந்த ஆலயத்தில் இரண்டு மூலவர் சன்னிதிகள் இருக்கின்றன.

பிரதான லிங்கமாக திருமேற்றளீஸ்வரர் திகழ்கிறார். மற்றொரு மூலவரின் திருநாமம், 'ஓதஉருகீஸ்வரர்' என்பதாகும்.

உற்சவரின் திருநாமம் சந்திரசேகரர். அம்மன் திருமேற்றளி நாயகி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் தல விருட்சமாக மாமரமும், தீர்த்தமாக சிவகங்கை தீர்த்தமும் உள்ளன.

ஒருமுறை மகாவிஷ்ணுவிற்கு சிவனின் லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
எனவே சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனோ, இது சாத்தியப்படாது என சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

விஷ்ணுவும் விடுவதாக இல்லை. சிவனை வேண்டி தவம் செய்ய தொடங்கினார். விஷ்ணுவின் மன திடத்தை கண்டு வியந்த சிவன் அவருக்கு அருள்புரிய எண்ணம் கொண்டார்.

அவரிடம் இத்தலத்தில் மேற்கு நோக்கி சுயம்புவாக வீற்றிருக்கும் தன்னை வேண்டி தவம் செய்து வழிபட்டு வர லிங்க வடிவம் கிடைக்கப் பெறும் என்றார்.

அதன்படி இத்தலம் வந்த மகாவிஷ்ணு தீர்த்தத்தில் நீராடி வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்திலேயே தவம் செய்தார்.

சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர் இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன் தான் என்று எண்ணி, சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார்.

அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு லிங்க வடிவம் பெற்றபோது சம்பந்தர் தனது பதிகத்தைப் பாடி முடித்தார்.

எனவே, இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம்.

சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர் ஓதஉருகீஸ்வரர் என்ற பெயருடன் இவ்வாலயத்தில் கிழக்கு நோக்கி சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.


காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் பிள்ளையார் பாளையம் என்னும் இடத்தில் திருமேற்றளித் தெருவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.