தூத்துக்குடி மெயின் ரோட்டு வல்லநாட்டிற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் கலியாவூர் சாலையில் சென்றால், திருமூலநாதர் ஆலயத்தை அடையலாம்.
தாமிரபரணி கரையில் உள்ள வல்லநாடு பகுதியை, 16-ம் நூற்றாண்டில் சீமாறன் வல்லப பாண்டியன் ஆண்டு வந்தான்.
அதனால் அந்த பகுதியை, ‘சீமாறன் சீவல்லப வள நாடு’ என்று, அவன் பெயரிலேயே அழைத்தனர். இந்த ஊரின் செழிப்புக்கு மிக முக்கிய காரணமாக, ஊருக்கு வடபுறம் உள்ள குளம் விளங்கியது.
அந்தக் குளத்தை சீமாறனனே வெட்டியதாக சொல்லப்படுகிறது. எனவே அந்தக் குளம், ‘சீவல்லப ராஜன் குளம்’ என்று அழைக்கப்பட்டது.
இதுவே நாளடைவில் மருவி ‘ராஜன் குளம்’ என்றானது. இந்த குளத்தின் கரையில், சுயம்பு லிங்கமாக இறைவன் எழுந்தருளி இருந்தார்.
மன்னன் அந்த வழியாக செல்லும் போதெல்லாம், அந்த சுயம்பு லிங்கத்தை வணங்காமல் சென்றதில்லை.
தன் நாட்டின் செழிப்புக்கு, இந்த இறைவனே காரணம் என்று அவன் நினைத்திருந்தான்.
அவன் எண்ணம் உண்மை என்பது போலவே, அந்த நாட்டில் நெல், மஞ்சள், வாழை, வெங்காயம், வற்றல், சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு, இன்னும் சில காய்கறிகள் எனப் பார்க்கும் இடமெல்லாம் வயல்வெளிகள் நிறைந்து, முப்போகம் விளைந்து கொண்டிருந்தது.
எங்கும் பச்சைப் பரப்பி, பரந்து விரிந்து காணப்பட்டதால், அது வளமான நாடாக விளங்கியது.
மன்னனும், மக்களும் மகிழ்ச்சியோடு இருந்தனர். பக்தர்களை சோதித்து, அவர்களின் வாயிலாக உலக மக்களுக்கு ஞானத்தை வழங்குவதே இறைவனின் திருவிளையாடல்.
அந்த வழக்கமான விளையாட்டை இறைவன், அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னனிடமும் காட்டினார்.
ஒரு முறை வழக்கம் போல, நாட்டை சுற்றி வந்து கொண்டிருந்தான் மன்னன்.
ராஜன் குளத்தை சுற்றி வந்தபோது, கரு மேகங்கள் சூழ்ந்து, மழைக்கான அறிகுறியை பறைசாற்றின. மறுகணமே, வானில் மின்னல் பளிச்சிட்டு, இடியுடன் கூடிய மழை கொட்டியது.
தானும், தான் வந்த குதிரை மற்றும் பரிவாரங்களும் நனையாதபடி ஒரு இடத்தில் ஒதுங்கி நின்றான், மன்னன். திடீரென்று அவனுக்கு குளக்கரையில் இருக்கும் சுயம்பு லிங்கத்தின் நினைவு வந்தது.
“என்னையும், என் நாட்டையும் வளப்படுத்திக் கொண்டிருக்கும் இறைவனை மறந்து விட்டேனே.
அவர் தானே வளர்ந்த மேனியராய், எந்த பாதுகாப்பும் இன்றி தனித்து இருக்கிறாரே. இந்த அடை மழையால் அவருக்கு பாதிப்பு வந்து விடுமோ” என்று நினைத்த மன்னன், உடனடியாக அந்த இடத்திற்குச் சென்றான்.
அங்கு மழையில், சுயம்பு லிங்கம் கரைந்து கொண்டிருந்தது. அதைக் கண்டு பதைபதைத்து போனான் மன்னன்.
ஆனாலும், ‘ஒரு அரசன் நினைத்தால் ஆகாத காரியம் என்ன இருக்கிறது’ என்ற அகந்தையில், அந்த லிங்கத்தை சுற்றி தன்னுடைய பரிவாரங்களை நிறுத்தி பாதுகாத்தான்.
இயற்கையையும், இறைவனையும் பாதுகாக்க மனிதனுக்கு சக்தி ஏது?
அவர்கள் எவ்வளோ முயற்சித்தும் லிங்கத்தை மழையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.
அருகில் இருந்து ஓலைகளை கொண்டு வந்து, சிறிய குடில் அமைத்தார்கள்.
ஆனால் திடீரென்று ஏற்பட்ட சூறாவளியில், அந்த குடில் இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது.
என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற மன்னன், அவனது கவுரவத்தை நிலைநாட்டும் மணி முடியை (வைர கிரீடம்) எடுத்து, சுயம்பு லிங்கத்தின் மீது வைத்தான்.
என்ன விந்தை!! .. உடனடியாக அடை மழை நின்றது.
சுழன்றடித்த சூறாவளி காற்றும் நின்று போனது. மண்ணை ஆளும் மன்னனுக்கு மணி முடி தேவையா?
இந்த உலகையே ஆளும் இறைவனுக்குத் தான் மணி முடி வேண்டும் என்று மன்னன் கருதியதால் அவனது அகந்தை அழிந்தது. உடனடியாக அந்த இடத்தில் கோவில் கட்ட நினைத்தவன், மிகப் பெரிய ஆலயத்தை நிர்மாணித்தான்.
உலகிற்கு மூலமாக இருப்பதால், அந்த இறைவனுக்கு ‘திருமூலநாதர்’ என்று பெயரிட்டான். இறைவனுக்கு அருகிலேயே, இறைவியையும் பிரதிஷ்டை செய்தான்.
அந்த அன்னைக்கு ஆவுடையம்மாள் என்று திருநாமம் சூட்டினான். மன்னருக்கு திருமூலநாதர் தனது திருவிளையாடல் மூலம் ஞானத்தினை அளித்த காரணத்தினால், இத்தல இறைவனை ‘ஞான ஹிருதேயேஸ்வரர்’ என்றும் அழைக்கிறார்கள்.
கல்வெட்டின் படி இந்த கோவில் அமைந்த ஊர் ‘செயங்கொண்ட பாண்டிய புரம்’ என்றும், ‘செயங்கொண்ட பாண்டிய நல்லூர்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
கல்வெட்டு குறிப்புகளின் படி இது 1500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆலயம் என்று அறியப்படுகிறது. இந்த ஆலயம் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இத்தல இறைவனின் மீது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் சூரிய ஒளி விழும்படி கட்டமைக்கப்பட்டுஇருக்கிறது.
ஆலயத்தின் பிரதான வாசல் வழியாக சூரிய ஒளி உள் நுழைந்து, கருவறையில் உள்ள மூலவரின் மீது படுவது போல் அமைந்திருக்கும் கட்டிடக் கலையை பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்த அதிசய நிகழ்வைக் காண்பதற்காகவே அந்த நாட்களில் ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகிறது.
ஆலயத்திற்கு கிழக்கு வாசல் தான் பிரதானமான வாசல். ஆனால் ஊர் தெற்கு பக்கமாக இருப்பதால், மக்களின் வசதிக்காக, தற்போது தெற்கு வாசலே பிரதான வாசலாக விளங்குகிறது.
கோவிலுக்குள் நுழைந்தால் ஆவுடையம்மாள் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கியபடி உள்ளார்.
இந்த அம்பாளுக்கு ஆடிப்பூரம் அன்று வளைகாப்பு சாத்தி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அம்மை சன்னிதிக்குள் நுழையும் போது, விநாயகர், துவாரபாலகி ஆகியோர் உள்ளனர்.
அருகிலேயே கல்விக்கு அதிபதியான சரஸ்வதி வீற்றிருக்கிறார். இவரை வணங்கினால் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அம்மன் கருவறையை சுற்றிவரும்போது, சண்டிகேஸ்வரியை வழிபடலாம்.
அடுத்து பிரதான சன்னிதியில் திருமூல நாதர் உள்ளார்.
தானே முளைத்த லிங்கம் இவர். எனவே அபிஷேகத்தில் கரைந்து விடக்கூடாது என்பதால், மேல் பகுதியில் குவளையுடன் காட்சி தருகிறார்.
கேட்ட வரம் தரும் இவரது மூர்த்தி சிறியதாக இருந்தாலும், கீர்த்தி பெரியது. கருவறைக்கு முன்பாக கொடிமரம் மற்றும் நந்தி உள்ளது.
வலதுபுறம் சொக்கர் - மீனாட்சிக்கு தனி சன்னிதி காணப்படுகிறது. திருவாதிரை காட்சி மண்டபத்தில் தெற்கு நோக்கி உள்ளது. இந்த மண்டபத்தின் முன்னால் உள்ள தூணில் கோவிலை உருவாக்கிய அரசனும், அரசியும் சிலை வடிவில் உள்ளனர்.
அவர்களுக்கு அருகில் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் உருவாக்கிய, தாமரை வடிவிலான நவக்கிரக ஸ்தூபி காணப்படுகிறது.
அதன் எதிரே வசந்த மண்டம் உள்ளது.
கோவிலுக்குள் நுழைந்தவுடன் சந்திர- சூரியர்களை வணங்கி, உள் சுற்று பிரகாரத்தில் நடந்து சென்றால், 63 நாயன்மார்களை வணங்கலாம்.
அவர்களுக்கு எதிரே தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார்.
கன்னி மூலையில் கணபதியும், தொடர்ந்து பஞ்ச லிங்கமும், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியரும் அருள்கின்றனர். அடுத்ததாக சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், நடராஜர், பைரவர் திருமேனிகளும் உள்ளன.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாளில் அன்னாபிஷேகம் நடைபெறும்.
ஆனி மாதத்தில் நடராஜருக்கு திருமஞ்சனம் சிறப்பாக நடக்கும். அன்னை ஆவுடையம்மாளுக்கு ஆடிப்பூர வளைகாப்பு பிரசித்தம்.
ஐப்பசியில் அன்னாபிஷேகம், சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் போன்றவையும் சிறப்பான வழிபாடாகும்.
இது தவிர கார்த்திகை சோமவார பூஜைகள், மார்கழி மாத பூஜைகள், திருவாதிரைத் திருவிழா, மாணிக்க வாசகர் குருபூஜை, இராக்கால பூஜை, பிரதோஷம் போன்றவையும சிறப்பாக நடத்தப்படுகிறது.
தை அமாவாசை அன்று ஆலயத்தில் பத்திர தீபம் ஏற்றப்படுகிறது.
இத்தல இறைவனை வழிபட்டால் மன நலம் குன்றியவர்கள் விரைவில் குணம் அடைவார்கள் என்று பக்தர்கள் சொல்கின்றனர்.
இருதய பலவீனம் உள்ளவர்களும் இந்த இறைவனை வழிபடலாம்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
நெல்லை - தூத்துக்குடி மெயின் ரோட்டில் 15 கிலோமீட்டர் தொலைவில் வல்லநாடு உள்ளது.
இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் கலியாவூர் சாலையில் சென்றால், திருமூலநாதர் ஆலயத்தை அடையலாம்.