திருவண்ணாமலை மாவட்டம், ஆரணில இருந்து சரியா 12 கிமீ தூரத்துல இருக்கு ”வாழைப்பந்தல்”. ஆரணில இருந்து அரை மணிக்கு ஒருதரம் பஸ் இருக்கு. ஆட்டோவுலயும் போகலாம்.
வேலூர், காஞ்சிபுரம், செய்யாறு ல இருந்து வாழைப்பந்தலுக்கு பஸ் இருக்கு. அது இல்லாம, செய்யாறு டூ ஆரணி ரோடுல மாம்பாக்கத்துல இறங்கி, அங்கிருந்து வாழைப்பந்தல் பஸ் ஏறி வரனும். வாழைப்பந்தல் ஊருல இருந்து 2 கிமீ தூரத்துல இருக்கு. “பச்சையம்மன்” கோவில். வாழைப்பந்தல்ன்னு புராணத்துல இருந்தாலும் முனுகப்பட்டு ஊராட்சிக்குள் இக்கோவில் இருக்குறதால முனுகப்பட்டு பச்சையம்மன் கோவில்ன்னும் சொல்வாங்க.
”அம்மா”ன்னா அன்பு, அறிவு, ஆனந்தம், அமுதம், ஆற்றல். அச்சமின்மைன்னு பல அர்த்தம் வருது. அம்மாக்கு அம்மா யார்? பாட்டி. பாட்டியோட அம்மா? அந்த அம்மாக்கு அம்மா?! அந்த ஆதி யார்? அது தான் ”இயற்கை”. இயற்கை வனப்பின் நிறம் பச்சை. பசுமை நிறம் கண்ணுக்கு குளிர்ச்சி, மனதிற்கு வலிமைன்னு இன்றைய ஆராய்ச்சியாளர்களே ஒத்துக்கிட்டு இருக்காங்க. அப்படி பெருமை வாய்ந்த பச்சை நிறத்தில் அருள் பாலிக்கும் அன்னையின் பெயர்தான் “பச்சையம்மன்”.
சிவனின் உடலில் சரி பாதி பிடிக்க வேண்டும் என வைராக்கியம் கொண்டு, அன்னை சிவனைப் பிரிந்து தவம் செய்ய பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தை தேடி அலைந்த போது.....
பசுமையான வாழை, அதன் கன்றுகளோடு வனப்பாகவும், வளமாகவும் தன் இனத்தோடு சேர்ந்து கூட்டுக்குடும்பமாய் இருக்கும் தோட்டத்தில் மண்ணால் ஆன சிவலிங்கத்தை கண்டதும் இதுவே சரியான இடம் என அன்னை உணர்ந்து, வாழை இலைகளால் பந்தலிட்டு, பூஜையை தொடங்க நீரைத் தேடினார்...ஆனால், சிவப்பெருமானோ தன் திருவிளையாடலை இந்த இடத்தில் தொடங்கினார்.
பசுமையான வாழைத்தோட்டத்தில் உள்ள நீர் நிலைகள், நீர் ஊற்றுகளையும் மறைத்து வைத்து விளையாடினார். மன உளைச்சலில் இருந்த அன்னை, சிவப்பெருமானின் விளையாட்டை உணராமல், தன் புதல்வர்களான விவேகமே உருவான விநாயகரையும், வீரத்தின் பிறப்பிடமான முருகனையும் அழைத்து பூஜைக்கு நீர் கொண்டு வரச் சொன்னார்.
தந்தையின் விளையாட்டை உணராத புதல்வர்களும் அன்னையின் கட்டளைப்ப்படி நீரை தேடி, மூத்தவர் கிழக்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு பாகத்துக்கு வந்தார், அங்கே ஒரு முனிவர் தன் கமண்டல் நீர் சிவனின் பூஜைக்கு மட்டுமே” என்று நீண்ட நாட்களாக தவம் செய்வதை உணர்ந்து தன் வாகனமான மூஞ்சூரை அனுப்பி கமண்டலத்தில் உள்ள நீரை கவிழ்க்க செய்தார், அந்த நீர் ”கமண்டல நதி”யாக பெருக்கெடுத்து அன்னையை நோக்கி ஓடியது.
இளையவரோ! எங்கு தேடியும் நீர் கிடைக்காததால் தன் வீர வேலை வீசி மலையை குடைந்து ஒரு ஆற்றை உருவாக்கினார். குழந்தை வடிவில் இருந்து முருகன் உருவாக்கிய நதி “சேய் ஆறா”க மாறி அன்னையை நோக்கி ஓடியது.
நீண்ட நேரமாகியும் நீர் கொண்டு வர சென்ற புதல்வர்களை காணாமல் அன்னையுடன் இருந்த நாகம்மா கிழக்கு தொடர்ச்சி மலையிலிருந்து நீரூற்றைக் கொண்டு வர, ”நாக நதி”யாக மாறி அன்னையை தேடி அதுவும் ஓடியது.
நீர் கொண்டு வரச் சென்றவர்களை காணவில்லையே என கவலைக்கொண்டு குறித்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டுமே என்று பூமாதேவியை வேண்டி சிறு குச்சியால் பூமியை தோண்ட ஊற்று பீறிட்டு வரவும், கணபதியின் ”கமண்டல நதி”யும், முருகனின் “சேய் ஆறு”ம், நாகம்மாவின் “நாக” நதியும், அன்னையின் பாதத்தை தழுவியது. எங்கே குறித்த நேரத்தில் பூஜை செய்ய முடியாமல் போகுமோ என்ற எண்ணத்தில் இருந்த அன்னையின் திருமேனி திரிவேணி சங்கமத்தால் உடலும், உள்ளமும் குளிர்ந்து சிவந்த நிற மேனி மாறி பச்சை நிறமானது. அன்னையும் குறித்த நேரத்தில் பூஜையை முடித்தார். தேவர்களும், முனிவர்களும் அன்னையின் நிலைக்கண்டு பூமாரி பொழிந்து வாழ்த்தினர்.
வானவர் மனம் மகிழ்ந்ததால் பெரு மழை பெய்தது. மழை நீரால் எங்கே மண்ணால் செய்த லிங்கத்துக்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சிய அன்னை, சிவலிங்கத்தை கட்டி அணைத்து மழைநீரை தன்மீது தாங்கினாள். அன்னையின் பிடியை தாளாத சிவப்பெருமான் “மண்ணாதீஸ்வரா”க காட்சி அளித்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த அசுரர்கள் அன்னையின் தவத்தை குலைக்க பல வழிகளில் முயற்சி செய்தனர். அதனால், தேவர்களும், முனிவர்களும் சிவன், விஷ்னுவிடம் சென்று முறையிட்டனர். சிவன் “வாமுனி”யாகவும்.., விஷ்னு “செம்முனி”யாகவும் அவதாரம் எடுத்து காத்ததாக சொல்லப்படுகிறது.
இக்கோவிலில் அமைந்துள்ள அம்மனின் திருவுருவம் வைரம் பாய்ந்த மரத்தால் ஆனது. அன்னையின் தியான ஜோதியாய் விளங்கும் விக்ரகம் மனித பிறவியில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்.
புது வாகனத்துக்கு பூஜை, திருஷ்டி கழிப்பு, உயிர் பலி இதெல்லாம் இங்கதான் நடக்கும். திருஷ்டி கழிப்புக்காக உடைக்கும் தேங்காயை தரையில் உடைக்காம கோபுர சுவற்றில்தான் உடைக்கனும். சுத்து வட்டார ஊர் மக்களுக்கு பெரும்பாலும் இதுதான் குல தெய்வம். குழந்தைக்கும் முதல் முடி காணிக்கை, காது குத்துலாம் இங்கதான் நடத்துவாங்க வேண்டுதலுக்காக உடலில் வேப்பிலை சேலை உடுத்துறது, தீச்சட்டி எடுப்பது, எலுமிச்சை பழம் உடம்பில் குத்தி நேர்த்திக்கடனை செலுத்துவாங்க.விரதமிருக்க திங்கள் கிழமை சிவனுக்கும், அம்மனுக்கு வெள்ளிக்கிழமை உகந்த நாள்ன்னு சொல்வாங்க. ஆனா, சிவன் வேறில்லை, சக்தி வேறில்லைன்னு சொல்லுற மாதிரி இந்த கோவில் மட்டும் திங்கள் கிழமை அம்மனுக்கு உகந்த நாள். அன்னிக்கு கோவிலில் கூட்டம் அலைமோதும். அதுலயும் ஆடி மாத 5திங்களும், ஆவணி மாத 4 திங்களும் சேர்ந்து 9 திங்கள் பூஜைக்கு வெளிநாட்டில் இருந்துலாம் கூட வருவாங்க.
மேலும் அதிக தகவலுக்கு: T.குமார் குருக்கள்,
தொடர்புக்கு: 04182- 244373
9444896937
இந்தியாவில் உள்ள அம்மன் சன்னதிகளும் அம்மன் வடிவங்களும் பல்வேறு வகைகளில் இருந் தாலும், ஒரு சில வடிவங்களில் காட்சி தரும் அம்மன் மிகவும் சக்தியும், அற்புத ஆற்றலும் படைத்து விளங்குவார்கள். அந்த வகையில் பச்சையம்மன் வழிபாடு என்பது மிகவும் பிரசித்தி பெற்றது மட்டுமல்லாமல், பச்சையம்மனை வணங்கினால், ஒரே நேரத்தில் பெருமாள், விநாயகர், பைரவர், மகாலட்சுமி (வேங்கடமலை நாச்சியார்), சரஸ்வதி (பூங்குறத்தி நாச்சியார்), இந்திராணி (ஆனைக் குறத்தி), மன்மதன் ரதி, வாழ்முனி, சுகரிஷி, கருடாழ்வார், செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, நாதமுனி, சடாமுனி, யோகினி போன்ற பல தெய்வங்களின் அருளும் ஒன்றுசேர கிடைக்கும்.
இதற்கு பல்வேறு சான்றுகளும், காரண காரியங் களும் உண்டு. பச்சையம்மன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருபதற்கு, மேற்கண்ட அனைவரும் பச்சையம்மனுடன் இருந்து உதவி புரிந்தனர். அம்மனின் தவம் நிறைவடையும்போது மேற்கண்ட அனைவரும் அம்மனுக்கு துணையாக இருந்ததால் பச்சையம்மன் கோயில் கொண்டுள்ள அனைத்து இடங்களிலும் இவர்களும் அம்மனுக்கு பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பச்சையம்மன் பக்தர்களுக்கும் இவர்கள் பாதுகாப்பு தருகின்றனர்.
இதன் காரணமாகத்தான் பேய், பிசாசு, பில்லி, சூன்யம், சாபம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் பச்சையம்மனை நாடி வழிபாடு செய்கின்றனர்.
பச்சையம்மனின் வரலாறு:
சிவபெருமானின் தீவிர பக்தரான பிருங்கி முனிவர், சிவனைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்காதவர். அந்த அளவிற்கு சிவபெருமான் மீது கட்டுக்கடங்காத பக்தியை வைத்திருந்தார். ஒருசமயம் கயிலையில் சிவபெருமானை வணங்க வேண்டி பிருங்கி முனிவர் வந்த சமயம், சிவனு டன் பார்வதி தேவியும், தேவர்களுக்கும், முனிவர் களுக்கும் ஒன்று சேர இருந்தனர்.
சிவனை மட்டும் வணங்கும் கொள்கையுடைய பிருங்கி முனிவர் ஒரு வண்டாக உருவத்தை மாற்றி சிவனை மட்டும் வலம் வந்து, பார்வதி தேவியை வணங்காமல், சிவனைமட்டும் வணங்கிவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் பார்வதி தேவி மிகுந்த மன வேதனை அடைந்தார், உடனே சிவபெருமானிடம் தனது வேதனையை தெரிவிக்கும் வகையில் ''ஐயனே! முற்றும் அறிந்த முனிவரே இப்படிச் செய்வது எந்த வகையில் நியாயம்? இனியும் இப்படி நிகழா மல் இருக்க தங்களின் உடலில் சரி பாதியை எனக்குத் தந்தருளுங்கள்'', என்று ஈசனை வேண்டினார். அதற்குச் சிவபெருமான் உடனே செவிமடுக்கவில்லை.
அன்னைக்கு ஒரு யோசனை தோன்றியது. கடும் தவம் இருந்தால், இவரிடம் வேண்டிய வரத்தினைப் பெறலாம் என்று முடிவு செய்து பூமியில் தவமிருக்க முடிவு செய்தார்.
காவி உடை, ருத்திராட்சம், சடை தரித்துப் பூலோகத்துக்கு வந்து தவம் செய்ய சரியான இடத்தைத் தேடினார். இமயம் தொடங்கி ராமேஸ்வரம், கன்னியாகுமரிவரை அனைத்துத் தலங்களிலும் நீராடி, சிவபிரான் குடிகொண்டுள்ள தலங்களில் சிவபூஜை செய்யக் கிளம்பினார். பார்வதியுடன் அவருடைய தோழிகளான 64 யோகினியர் துணையாக வந்தார்கள்.
பச்சை நிறமாக மாறிய அன்னை:
பூமியில் தவம் புரியவும், லிங்கம் வடிக்கவும் தண் ணீர் தேடினார் அன்னை பார்வதி தேவி. ஆனால் தண்ணீர் உடனடியாக கிடைக்கவில்லை. இதனால் தவித்துப் போன அன்னையின் உடல் கோபத்தால் சிவந்த மேனியாக மாறியது.
உடனே தன் புதல்வர்களான விநாயகரையும், முருகனை யும் தண்ணீர் கொண்டுவரப் பணித்தாள். அதன்படி விநா யகர் சற்றுத் தொலைவில் உள்ள மலையில் முனிவர் தவமிருப்பதையும், அவர் அருகே கமண்டலத்தில் நீர் இருப்ப தையும் அறிந்து, அதனைத் தன் வாகனமான மூஞ்சுறுவின் உதவியால் கவிழ்த்தார். கமண்டல நீர், கமண்டல நாக நதியாகி, அன்னை தவம் இருந்த இடத்தை நோக்கிப் பாய்ந்தது.
முருகப்பெருமான் தொலைவில் உள்ள மலை மீது தன் வேலைப் பாய்ச்சி நீர் வரச்செய்து ஆறாக்கியதால், அது சேயாறு ஆனது. இதற்குள் அன்னை தன் பிரம்பினை பூமி யில் அடித்து நீர் வரச் செய்தாள். அது பிரம்பக நதி என்று பெயர் பெற்றது.
பிறகு தன்னுடைய பிள்ளைகளின் முயற்சியாலும், தன்னு டைய முயற்சியாலும் மூன்று நதிகள் தோன்றியதில், அன்னை யின் உள்ளம் குளிர்ந்தது. இதையடுத்து சாந்தமாக தவம் இயற்றத் தொடங்கிய அன்னையின் மேனி பச்சை நிறமாக மாறியதாக கூறப்படுகிறது.
ஏழு முனிவர்கள்
அன்னையின் தவப் பிரவேசம் ஒவ்வொரு ஊராக தொடர, #உஜ்ஜைனி வரும்போது, அக்னி வீரன், ஆகாச வீரன் உட்பட மொத்தம் ஏழு சகோதரர்கள் பெண் பித்தர்களாகவும் அநீதர்களாகவும் கொடுமையானவர்களாகவும் ஆண்டு வந்தனர். அக்னி வீரன், அழகு மிகுந்த பெண்ணான உமா தேவியிடம் சென்று தான் அவரைக் கண்டு மோகிப்பதாகக் கூறினான். பார்வதி உடனே சிவனைத் துதிக்க, திருமால் பிரம்மா மற்றும் அஸ்வினி தேவர்கள் அவருக்குப் பக்கத் துணையாக வந்தனர்.
தன் சகோதரியிடம் தகாத வார்த்தை பேசிய அக்னி வீரனைக் கண்டு பெரிய அரக்க வடிவம் கொண்ட #திருமால், வானளவு உயர்ந்து அவனைத் தன் காலடியில் அழுத்திச் செயலற்றவனாக்கினார். வானளவு உயர்ந்து நின்றதால் #வான்முனி எனப்பட்டு காலப்போக்கில் வாழ்முனியாக மருவி அழைக்கப்பட்டார். உடன் வந்த ரிஷிகளும் திருமாலைப் போல் பேருரு கொண்டனர்.
இதன்பின், சாகாவரம் பெற்றிருந்த சகோதரர் கள் ஆகாய வீரன், ஜல வீரன் சண்ட வீரன், ரண வீரன், கோட்டை வீரன், அந்தர வீரன் ஆகி யோரைச் செம்முனி, கருமுனி முத்துமுனி வேதமுனி, நாதமுனி சடாமுனி ஆகியோர் அவர்களைச் செயல்படாதவாறு செய்தனர். அவர்களின் தலை மட்டும் தெரிய, முனிவர்கள் எழுவரும் பூமிக்குள் அழுத்திக்கொண்டு அமர்ந் தனர்.
அக்னி வீரனின் மகனான வீரமுத்து இதைக் கண்டு வெகுண்டெழுந்து போருக்கு வர, வாழ் முனியான திருமால் அவனது படை களை அழித்தார். அவனை வதம் செய்யப் போகும்போது அவனுடைய மனைவி வீராட்சி விஷ்ணுவின் காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்க, வாழ்முனி அவனை விடுவித்தார்.
போர் முடிந்ததும் பெருமாளின் தங்கையான பச்சையம்மனின் தவத்திற்கு துணையாக இருக்க மகாலட்சுமி (வேங்கடமலை நாச்சியார்), சரஸ்வதி (பூங்குறத்தி நாச்சியார்), இந்திராணி (ஆனைக் குறத்தி ரதி) ஆகியோர் இருப்பார்கள் எனக் கூறிச் சென்றார் திருமால்.
சிவன் கட்டளைப்படி அவர்களோடு உமையாள் காசிமா நகர் சென்று அன்னபூரணியாகி அறம் செய்து யோக பூமியான காசியை விட்டு ஒவ் வொரு சிவத்தலமாக பூஜை செய்து மோக பூமியான காஞ்சி செல்லத் தொடங்கினார். அவ்வாறு அம்மன் வழிபட்ட திருத்தலங்கள் பல தமிழகத்தில் உள்ளது. ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.
சென்னையைச் சுற்றி சுமார் 15 பச்சையம்மன் தலங்கள் உள்ளன. அதில் மிகவும் பழமையும், புராண தொடர்பும் மிகுந்தது சென்னை ஆவடி செல்லும் வழியில் திருமுல்லைவாயில் அமைந்துள்ள பச்சையம்மன் தலம். இத்தலத்தில் கங்கை சூரிய புஷ்கரணி என்னும் சக்தி தீர்த்தத்தை பச்சையம்மன் உருவாக்கினார். அந்தத் திருக்குளத்தின் கரையில் மக்களுக்கும் தேவர்களுக்கும் அல்லல் கொடுத்துவந்த ஹதாசுரனையும் அவனது படைத்துணை மகா பூதத்தையும் அழித்தார். அங்குக் கோயிலை அமைத்து சிவபூஜை செய்தார்.
மரகதவல்லியாக குடிகொண்டதால் இங்கு அவளை பச்சைமலை அம்மன் என அழைத்து வழிபடுகிறார்கள்.
இந்தக் கோயிலில் மன்மதன் ரதி, பெருமாள், முடியால் அழகி பூங்குறத்தி, விநாயகர், பைரவர் ஆகியோருடன் திருமால் பெரிய மீசையுடன் வாழ்முனியாக அமர்ந்திருக்கிறார். எதிரில் சுகரிஷியும் கருடாழ்வாரும் துணை நிற்கின்றனர். செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, நாதமுனி, சடாமுனி ஆகிய ஆறு முனிகளும் அமர்ந்து காவல் காக்கின்றனர். எதிரே அவர்களது குதிரை முதலிய வாகனங்கள் தயார் நிலையில் அணிவகுத்து நிற்கின்றன. எதிரில் கௌதம முனிவர் சிவலிங்க உருவோடு நின்ற கோலத்தில் அருள, அவருக்கு வலப்புறம் பச்சையம்மன் தவக்காலத்தில் வழிபட்ட #மன்னாதீஸ்வரர்அகோரவீரபத்திரர் சன்னிதிகள் உள்ளன. இங்குள்ள வானொலி நிலைய வளாகத்தில் உள்ள அம்மனின் காலடி, பக்தர்களால் வணங் கப்படுகிறது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளானூர் சிற்றரசர் ஒருவர் நோய் வாய்ப்பட்டார்.
அவரின் நோய் குணமாக குறிகேட்டனர். அப்போது பூலோகத்தில், அம்பாளின் காலடிபட்ட இடமான திருமுல்லைவாயல் சென்று ஒருநாள் இரவு தங்கும்படி கூறி உள்ளனர். இதனையடுத்து, அவர் தான் தினமும் பூஜை செய்யும் அம்பாள் சிலையுடன் திருமுல்லைவாயலில் சென்று தங்கினார். மறுநாள் காலையில், தன் நோய் குணமானதை கண்டு அரசர் ஆச்சரியப்பட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட போது, அம்பாள் சிலையை எடுக்க முயன்றார். ஆனால், சிலையை அசைக்க கூட முடியவில்லை. இதனால் அம்பாள் அங்கேயே தங்கி, அருள் புரிய விரும்புவதாக கருதி, அங்கேயே அவருக்கு சிறிய கோயில் ஒன்றை எழுப்பினார்.
, மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. அம்பாள், பச்சையம்மனாகவும், இறைவன் மண்ணாதீஸ்வரராகவும் அருள் பாலிக்கின்றனர். இந்த கோயில் வளாகத்தில் வராகி, ஐயங்கிரீவர், காயத்திரி, காத்தாயி, துர்க்கை, உக்கிரவீரன், வீராட்சி, விஸ்வரூப மகாவிஷ்ணு, சப்த ரிஷிகள் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. பல சமுக மக்களுக்கு பச்சையம்மன் குல தெய்வமாக விளங்குகிறாள்
ஓம்சக்தி.
உரை தகவல் உதவும் உள்ளத்துக்கு சொந்தக்காரர் சகோதரி ராஜிக்கு நன்றிகள்