ஆதியில் தேதிகள் கிடையாது. திதிகள் மாத்திரமே.
பதினைந்து திதிகள், இரண்டு Cycle கள். வளர்பிறை என்றால் சுக்கிலபட்சம், தேய்பிறை என்றால் கிருஷ்ணபட்சம். அநேகமாய் பௌர்ணமியை மாசப் பிறப்பாக வைத்திருந்திருப்பார்கள்.
தேதிகள் வந்த பிறகு மாசப் பிறப்பு பௌர்ணமி என்பதை நிலையாக வைக்க முடியவில்லை. எல்லா மாசமும் முப்பது தேதிகள் இல்லை என்பதால் பௌர்ணமி ஷிஃப்ட் ஆகிக் கொண்டே போயிற்று.
ஆகவேதான் மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளாம் என்று ஆரம்பித்தார் ஆண்டாள்.
போதுவீர் என்றால் அகல்வீர் என்று பொருள். அதாவது புறப்படுங்கள் என்று அர்த்தம். போதுமினோம் என்றால் செல்வோரானோம். குளிக்கக் கிளம்புங்க பெண்களே, எல்லாரும் குளிக்கப் போகலாம்.
சிறப்பு மிகுந்த ஆய்பாடியின் செல்வச் சிறுமிகளே, எனும் போது ஊரில் எல்லோரும் நிறைவான செல்வத்தோடு வாழ்ந்தார்கள் என்பது தெரிகிறது. இந்த வரிக்கு இன்னொரு அர்த்தம் கூடச் சொல்லலாம்; சீர்மல்குமாய் பாடி அதாவது சிறப்பு பெருகப் பாடியபடி குளிக்கப் போவோம் என்றும் சொல்லலாம்!
யார் இந்தக் கண்ணன்?
ஆயர்பாடியின் தலைவரான சாந்த சுவரூபியாக இருந்தாலும் கண்ணனைத் துன்பம் செய்யும் நோக்கில் யாராவது நெருங்கினால் கூரிய வேலாயுதத்தை கையில் எடுத்து அவர்களைக் கொலை செய்யும் அளவு கொடூரமாக ஆகும் நந்தகோபனின் மகன்.
அம்மா யார் தெரியுமா? யசோதா. எந்த யசோதா? கண்ணனின் ஒவ்வொரு செயலையும் ஆச்சரியமாய்ப் பார்த்துப் பார்த்து கண்கள் அகண்டு போய் ஏரார்ந்த கண்ணியான யசோதா இருக்கிறாளே அவளுடைய இளம் சிங்கம்.
கண்ணன் ஒரு கலர்ஃபுல் பையன் தெரியுமோ?
கார்மேகம் போல கரியமேனி. கண்கள் இரண்டும் சிவப்பு. கதிர்மதியம் போன்ற முகம் என்றால் ஒளிமிகுந்த நிலவு போன்ற முகம் என்றும் சொல்லலாம். சூரியன் போல ஒளியும் அதே சமயம் சந்திரனின் குளிச்சியும் நிறைந்த முகம் என்றும் சொல்லலாம்!
இந்தப் பாரினில் இருக்கும் மக்கள் எல்லோரும், அடடா பக்தி என்றால் இதுவல்லவோ என்று நம்மைப் புகழ்கிற மாதிரி நாராயணின் அவதாரமான கண்ணனைப் பணிவோம்.
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் ;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்!
பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்.