Breaking News :

Wednesday, March 12
.

திருவள்ளூர் தலபுராணம்


முற்காலத்தில் மஹரிக்ஷி ஒருவர் "சாலி" என்று அழைக்கப்படும் நெல்லைக் கொண்டு திருமாலை குறித்து வேள்வி புரிந்தார். அதில் மகிழ்ந்த திருமால் அவருக்கு தவசீலரான ஒரு மகன் பிறப்பான் என்று அருளினார். அதனால் தனது மகனுக்கு "சாலிஹோத்திரன்" என்று பெயரிட்டார்.

சாலிஹோத்திர மஹரிஷி பல்வேறு திருத்தலங்களுங்கு சென்று பகவானை வணங்கி வந்தார். ஒருமுறை, இன்றைக்கு திருவள்ளூர் என்று அழைக்கப்படும் இடத்திற்கு வந்தார். அவர் வந்த நாள் தை மாதம் அமாவாசை. அங்கிருந்த திருக்குளத்தில் தேவர்கள் முதலானோர் நீராடுவதைக் கண்டு, தாமும் நீராடி தவமியற்ற உறுதி பூண்டார்.

ஓராண்டு காலம் உணவு, நீரின்றி தவமியற்றினார். ஓராண்டு நிறைவுற்றதும், அடுத்த தைமாதம் அமாவாசை அன்று தன்னிடம் இருந்த அரிசியைக் கொண்டு ஒரு கைப்பிடி மாவு அரைத்தார். உண்பதற்கு முன் ஒரு அதிதியை எதிர்பார்த்து காத்திருக்க, பகவான் ஒரு வயதான அந்தணராக மஹரிஷியின் குடிலுக்கு வந்தார். தன்னிடமிருந்த மாவில் ஒரு பங்கை பகவானுக்கு அளித்தார் சாலிஹோத்ர மஹரிஷி. அது போதாதென்று உணர்ந்த முனிவர், தன்னிடமிருந்த அனைத்து உணவையும் அந்தணராய் வந்த பகவானுக்கே அளித்தார். உண்டு முடித்து பகவானும் கிளம்பி சென்றார். மீண்டும் ஒரு வருடம் தவமியற்றினார் மஹரிஷி. அடுத்த தை அமாவாசை அன்றும் அதே அந்தணர் (பகவான்) தனது குடிலுக்கு வர, தன்னிடமிருந்த உணவை மீண்டும் அவருக்கே அளித்தார் மஹரிஷி. உண்ட பின்னர் அந்தணர் (பகவான்) தனக்கு களைப்பாக இருக்கிறது என்றும், தான் உறங்குவதற்கு இடம் எங்கே, 'எவ் வுள்?' என்று கேட்க, அதற்கு மஹரிஷி தாங்கள் இங்கேயே இளைப்பாறலாம் என்று கூறினார். மஹரிஷியின் விருந்தோம்பல் மற்றும் பக்தியில் மகிழ்ந்த பகவான் தனது சுயரூபத்தை காட்டி, மஹரிஷியின் குடிலிலேயே சயனித்தார். அவரருகில் அமர்ந்த மஹரிஷியின் தலையில் தனது வலது கையை நீட்டி ஆசீர்வதிக்கும் திருக்கோலத்தை இந்த திருத்தலத்தில் கண்டு மகிழலாம்.

புராண காலத்தில் இந்த திருத்தலத்திற்கு "வீஷாரண்யம்". பகவான் தான் இளைப்பாற 'எவ்வுள்?' என்று கேட்டதால், இந்த திருத்தலமும் "திரு எவ்வுள்" என்று பெயர் பெற்றது. பின்னர், அது மருவி 'திருவள்ளூர்' ஆனது. இந்த திருத்தலத்திற்கு "புண்யாவர்த்த க்ஷேத்திரம்" என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கு நாம் செய்யும் அனைத்து புண்ணிய செயல்களும் பலமடங்கு பலனளிக்கும் என்பதால் இந்த தலம் இப்பெயர் பெற்றது. திருமங்கையாழ்வாராலும், திருமழிசை ஆழ்வாராலும் பாடல்பெற்ற திருத்தலம்.

தாயாரின் திருநாமம் 'கனகவல்லி எனும் வஸுமதி'. திருக்குளத்தின் திருநாமம் 'ஹ்ருத்தாப நாசினி', அதாவது இதில் நீராடுவோர் மட்டுமல்ல இந்த திருக்குளத்தை மனதால் நினைப்போருக்கு கூட அவர்களது பாபம் மற்றும் அதனால் அவர்கள் மனதில் உண்டாகும் தாபங்களையும் போக்கிவிடும் என்பதால் இந்த திருப்பெயரை பெற்றது.

வீரராகவரும் அமாவாசையும்:

பகவான் சாலிஹோத்திர மஹரிஷிக்கு காட்சியளித்தது ஒரு தை அமாவாசை என்பதால் 'தை அமாவாசை' இந்த திருத்தலத்திற்கு ஒரு முக்கியமான நாளாகும். இன்று ஹ்ருத்தாபநாசினி புஷ்கரிணியில் (திருக்குளத்தில்) குளித்தால், கங்கையில் குளித்ததை விட பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்று பகவான் அருளியுள்ளார். தைமாதம் மட்டுமின்றி, அனைத்து அமாவாசை அன்றும் இந்த திருத்தலத்தில் அடியவர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து மூன்று அமாவாசைகள் வீரராகவரைத் தரிசித்தால் தீராத நோய்களும் தீருமென்பது அடியவர்களின் அனுபவம்.

அவரது திருவவதார நன்னாளான இந்த தை அமாவாசையில் அனைவருக்கும் நோயற்ற வாழ்வும், ஆரோக்கியமும் அருளட்டும் என்று பகவானை பிரார்த்திக்கிறேன் !!!!

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் !!!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.