பிரம்மஹத்திதோஷம் நீக்கும் திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர்!
காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று என்ற சிறப்பினை பெற்ற தலம்.
ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்
ஸ்ரீ ஜோதி மகாலிங்க சுவாமி
கோவில்
ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயம்
திருவிடைமருதூர்
பிரம்மஹத்திதோஷம் நீக்கும் பரிகாரமுறை
கட்டணம் ஒரு நபருக்கு RS 850 மற்றும் தட்சிணை RS 100 கோயில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும்
தினசரி 8 மணி முதல் 11 மணி வரை 3 அல்லது 4 BATCH பக்தர்களை பொறுத்து
உங்களுக்கு தகுந்த நேரம் முதல் நாளில் சொல்லி பதிவு செய்து கொள்ளவும் . அதாவது 8,மணி அல்லது 9 மணி BATCH என்று
அபிஷேக பொருட்கள் அனைத்தும் கோயிலில் தந்து விடுவார்கள்
பிரம்மஹத்திதோஷம் நீங்கி புண்ணியம் பெற்று உய்ய வேண்டும் எல்லோரும்
ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர்திருவருளால் !
Sri Mahalinga Swamy Temple
Thirumanjana Street
Thiruvidaimarudur – 612 104.
Telephone 0435-2460660 (or) Mr. Baskar (+91-9244291908)
காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று என்ற சிறப்பினை பெற்ற தலம்.
பார்வதிதேவிக்கு மிகவும் பிடித்த ஸ்தலங்களுள் ஒன்று.
சிவபெருமான் தன்னைதானே பூஜித்த தலங்களுள் ஒன்றான தலம்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 93 வது தேவாரத்தலம் ஆகும்.
சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30ஆவது சிவத்தலமாகும்.
மாணிக்கவாசகர் இத் தலத்தை
பாடியுள்ளார்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர்
மூவரது தேவாரப் பாடல் பெற்ற தலம்.
திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
கருவூர்த்தேவர்,, பட்டினத்தார்
ஆகியோரும் இத்தலத்தை பாடியுள்ளனர்.
இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன.
இந்தத் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் சிறப்பாக இயங்குகிறது.
பத்திரகிரியார் பட்டிணத்தார் முறையே மேற்கு கிழக்கு கோபுரத்தில் காட்சி தருகின்றனர்.
பத்திரகிரியார் சிவனை கண்ட ஸ்தலம் .
பட்டினத்தார் பேய்கரும்பு பெற்ற ஸ்தலம்.
மூலவர்:
மகாலிங்கேசுவரர், மருதவனேசுவரர், மருதவாணர்
ஸ்ரீ ஜோதி மகாலிங்க சுவாமி
இறைவன்
சுயம்பு மூர்த்தியாவார்.
தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.
தாயார்:
பிரகத் சுந்தரகுஜாம்பிகை, பெருநலமாமுலையம்மை
தல விருட்சம்:
மருத மரம் (அர்ஜூனம்)
தீர்த்தம்:
காவிரி
காருண்யாமிர்த தீர்த்தம்,
சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என முப்பத்து இரண்டு தீர்த்தங்கள்
கோவிலை வழிபட்டவர்கள்:
உமா தேவியார், விநாயகர், முருகன், திருமால், இலட்சுமி, காளி, சரஸ்வதி, சந்திரன் மற்றும் அவரின் 27 மனைவியர்,
வேதங்கள், வசிட்டர், உரோமச முனிவர், ஐராவணம், அகத்தியர், சிவவாக்கியர், கபிலர், வரகுண பாண்டியன் ஆகியோர் வழிபட்ட தலம்.
ஊரின் வேறு பெயர்கள்
சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் முதலிய காரணப்பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.
காசிக்கு சமமான
காவிரிக் கரையில் உள்ள 6 சிவத்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன.
அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும்.
மற்றவை
1. திருவையாறு,
2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்
பஞ்ச லிங்க தலம்
தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விசுவநாதர், ஆத்மநாதர்,
ரிஷிபுரீசுவரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.
பஞ்சகுரோசத்தலங்கள்
திருவிடைமருதூர்,
திருநாகேஸ்வரம்,
தாராசுரம், சுவாமிமலை,
திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன.
கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும்.
வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன.
சப்தஸ்தானம்
திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநீலக்குடி,
இலந்துறை,
ஏனாதிமங்கலம்,
திருநாகேஸ்வரம்,
திருபுவனம்,
திருவிடைமருதூர்,
மருத்துவக்குடி
ஆகிய தலங்களாகும்.
மருதவனம் செண்பகாரண்யம்
மருத மரங்கள் நிறைந்த வனமாக
இருந்ததால் இவ்வூர் மருத வனம் எனவும்
செண்பக மரங்கள் அதிகமாக காணப்பட்டதால் செண்பகாரண்யம் எனவும் அழைக்கப்பட்டது.
இவ்வூரில் மருதமரங்கள் செண்பக மரம் இப்போது அரிதாகிப் போனது
அர்ஜீனம்
அர்ஜுனம் என்றால் மருதமரம்
ஆகும்.
மருத மரத்தைத் தல மரமாகக் (ஸ்தல விருட்சம்) கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று.
முதலாவது ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில்.
இரண்டாவது மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர்.
மூன்றாவது புடார்சுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு திருநெல்வேலிக்கு அருகே அம்பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூர்.
இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடைமருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன.
மகாலிங்க தலத்தின் பரிவார தலங்கள்.
மகாலிங்கத் தலம் என்று புகழப்படும் இத்தலத்தைச் சுற்றிப் பரிவாரத் தலங்கள் ஒன்பது உள்ளன.
1 - விநாயகர் - திருவலஞ்சுழி.
2 - முருகன் - சுவாமிமலை.
3 - நடராசர் - தில்லை.
4 - நவக்கிரகம் - சூரியனார் கோயில்.
5 - தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி.
6 - பைரவர் - சீர்காழி.
7 - நந்தி - திருவாவடுதுறை.
8 - சோமாஸ்கந்தர் - திருவாரூர்.
9 - சண்டேஸ்வரர் - திருவாய்ப்பாடி.
ஒரு சிவாலயத்தில் மூலவராக விளங்கும் லிங்கம், அவருக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் நந்தி, சுற்றுப்பிரகாரத்தில் பிரதட்சணமாகச் சென்றால் விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ் கந்தர், சண்டேச்வரர், பைரவர், நடராஜர், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்கள் குடிகொண்டுள்ளன. ஐதீகப் பிரகாரம் மூலவரைத் தரிசித்து வணங்கியபின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள கோஷ்ட தெய்வங்களைத் தரிசித்தால்தான் சிவதரிசனம் பூர்ணமாகப் பூர்த்தியாகும் என்பது நமது பண்டைய மரபு மற்றும் சாஸ்திரமாகும்.
இந்த ஆகம முறைப்படி-விதிப்படி-ஒரு ஆலயம் எவ்வாறு நிர்மாணிக்க வேண்டுமோ அதேபோல் சோழ நாட்டையே ஒரு சிவாலயமாக்கி, அதன் நடுநாயகராகத் திருவிடை மருதூர் உறைமகாலிங்கத்தை மூலவராக்கி இருக்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் மூலவரான மகாலிங்கத்தை கர்ப்பக்கிரகமாக நோக்கினால் இவ்வாலயத்தின் ஏனைய பரிவார மூர்த்திகள் இருக்க வேண்டிய திசைகளில் உள்ள ஊர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திவ்ய ஷேத்ரமாக விளங்குவதைப் பார்க்கலாம்.
இவை அனைத்துமே ஆகம விதிப்படி எந்தெந்தப் பரிவார மூர்த்திகள் எந்தெந்தத் திசைகளில் இருக்க வேண்டுமோ, அவ்வூரில் உள்ள அந்த ஆலயம் அவ்வாறே விசேஷ தலமாக அமைந்திருக்கிறது.
திருவலஞ்சுழி ஆலயம் திருவிடைமருதூர் மகாலிங்கத்துக்கு ஸ்ரீ விக்னேச்வரர் சந்நிதி, சுவாமிமலை ஸ்ரீ சுப்ரமணிய ஷேத்ரம்,
திருவிடைமருதூருக்கு 10 மைல் தெற்கில் உள்ள திருவாலங்குடி தட்சிணாமூர்த்தி ஷேத்ரம், இடைமருதூருக்கு நேர் வடக்கில் உள்ள திருஆப்பாடி என்பது சண்டேச்வரர் கோவில், சண்டேச்வர நாயனார் சேய்ஞலூரில் அவதாரம் செய்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.
திருவிடைமருதூருக்கு நேர் கிழக்கே உள்ளது திருவாவடுதுறை. அது நந்தி ஷேத்ரம். திருவாரூரில் சோமஸ்கந்தர், தில்லையில் நடராஜர், சீர்காழியில் பைரவர், மாந்துறை எனப்படும் சூரியனார் கோவில் சூரிய பகவானுக்குரிய ஷேத்ரம். இவ்வாலயத்தில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன. இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக விளங்குகிறது.
புண்ணிய தீர்த்தங்கள்
ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் மிகவும் புகழ் வாய்ந்தது.
ஒருமுறை சிவன், அம்பிகையிடம் இத்தல மகிமையைச் சொல்ல,
அம்பிகை ஆனந்த கண்ணீர் வடித்தாள். அதுவே குளமாக உருவெடுத்தது. இது காருண்ய (கருணை) தீர்த்தம் எனப்படுகிறது.
அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது.
தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர்.
இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு.
இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது.
பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி
தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான்.
பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முகதி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது
உரோமச முனிவரும் காக்காகுள தீர்த்தமும்
உரோமசர் எனும் முனிவர், தன் சீடர்களுடன், பல திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தார்.
வழியில் திருவிடைமருதூருக்கும் வந்தார்.
அங்கே, கல்யாண தீர்த்தத்தில் (தற்போது பூசத்துறை) நீராடினார். பின்னர் அங்கிருந்து கிளம்பி, கனக தீர்த்தக் கரையை அடைந்தபோது, அங்கே ஓர் அதிசயத்தைக் கண்டார்.
காக்கை ஒன்று அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, அருகில் உள்ள மருதமரக் கிளையில் உட்கார்ந்தது. அக்கணமே அந்தக் காகம் பொன்னிறம் பெற்றுப் பிரகாசித்தது
தற்போது காக்கைக் குளம், காக்கா குளம் எனப்படுகிறது
அதைக் கண்டு உரோமசர் வியந்தார். அப்போது அந்தக் காகம் பேசத் துவங்கியது:
''பூவுலகில் காவிரி நாட்டைப் போன்ற ஒரு நாடு இல்லை; திருவிடைமருதூருக்கு இணையான ஒரு தலமும் இல்லை; இங்குள்ள மகாலிங்க பெருமானுக்கு ஒப்புமை கூறத்தக்க ஒரு தெய்வமும் இல்லை. கொடிய வினைகளைத் தீர்க்கும் மாமருந்தாக விரிசடைக் கடவுள் இருக்கும் திவ்ய தலம் இதுவாகும். புண்ணியம் செய்தவர்களே இந்தத் தலத்தை அடைவார்கள். பாவம் செய்தவர்கள்கூட இந்தத் தலத்தை அடைந்தால், மேன்மை பெறுவர்'' என்றது.
உடனே உரோமசர், ''நீ முனிவனா, தேவனா, மாயையா அல்லது பறவையா? சற்று விளக்கமாகச் சொல்!'' என்றார்.
''நான் அந்தணர் குலத்தில் தோன்றியவன்; செல்வந்தனும்கூட! வேதாகமங்கள், புராணங்கள் மற்றும் அருங்கலைகளைக் கற்றவன்.
ஒரு நாள், சூரிய கிரகணத்தன்று பலரும் புண்ணிய நதிகளில் நீராடி, தங்களால் இயன்ற
தான- தருமங்களைச் செய்தனர்.
ஆனால், நான் எதுவும் செய்யவில்லை; அது என் வினைப் பயன்! புண்ணியப் பயன் எவரையும் உயர்த்தும்; பாவப் பயனோ, யாராக இருந்தாலும் கீழே வீழ்த்தும்.
அன்று நானும் புண்ணிய தீர்த்தக் கரையை அடைந்தேன்.
அரசன் ஒருவன் தானம் அளித்துக்கொண்டிருந்தான்.
நானும் தானம் பெற்றேன். அப்போது அரசன் என் மார்பில் சந்தனம் இருந்ததைக் கண்டான்.
'நீ இதற்கு முன்பும் தானம் பெற்றுக் கொண்டாய் அல்லவா?’ என்று கேட்டான்.
நானும் 'ஆமாம்’ என ஒப்புக்கொண்டேன்.
உடனே, 'வீடுகள் தோறும் இரை தேடும் காகத்தைப் போன்றவனே! முன்பு ஓரிடத்தில் தானம் ஏற்று, உடனே என்னிடமும் தானம் ஏற்க வந்துள்ளாய்! நீ காகம் ஆகுக!’ எனச் சபித்தான்.
அப்போதே நானும் அவனைச் சபிக்க நினைத்தேன். ஆனால், அரசனின் புரோகிதன் என்னைத் தடுத்தான்.
'ஊழ்வினைப் பயனே உனது இந்தக் கதிக்கு காரணம். ஒரே நாள் இரண்டு தானங்கள் பெறுவதால் ஏற்படும் பாவம் பொல்லாதது. அரசனைச் சபித்தால் உனது காக வடிவம் நீங்காது போகும். எனவே, புண்ணிய தீர்த்தங்களில் நீராடு; சிவனருளால் உனக்கு
விமோசனம் கிடைக்கும்.
மேலும், அரசன் உன்னை சபித்ததால், அவனுக்குத் தானம் செய்த பலன் இல்லாமல் போய்விட்டது!’ என்று அறிவுறுத்தினான்.
காக வடிவம் கொண்ட நானும் பல்வேறு தீர்த்தங்களில் சென்று நீராடி வந்தேன்.
காய்- கனிகள் மற்றும் கோயில் முன்பு இடும் பலி உணவு ஆகியவற்றை உண்டு வாழ்வைக் கழித்தேன்.
முன்பு எப்போதோ செய்த சிறு தவத்தின் பலனாய் இவ்விடத்துக்கு வந்தேன்.
இந்தத் தீர்த்தத்தில் நீராடி, மகா முனிவராகிய உங்களையும் சந்தித்தேன்'' என்று காகம் விவரித்து முடிக்கவும்,
அங்கே பொன் விமானம் ஒன்று தரையிறங்கியது. காகம் ருத்ர வடிவம் பெற்று, விமானத்தில் ஏறி, கயிலை மலையை அடைந்தது.
காகத்துக்குப் பொன்னிறம் அளித்து, ருத்ர வடிவம் அருளியதால், இந்தத் தீர்த்தத்துக்கு காக தீர்த்தம் என்று பெயர் . அரசு மருத்துவமனைக்கு கிழக்கே உள்ளது இத் தீர்த்தம்.
அயிராவணம்
சிவபெருமானுடைய யானையாகிய அயிராவணம் பணிந்து வணங்கிய திருத்தலம்.
சிவனின் வாகனமாகிய அயிராவணம் எனும் யானையின் விருப்பத்தினை - ஈசன் ஈடேற்றி - தை பூச நாளில், யானை தவமிருந்த திருக்குளக்கரையினில் தீர்த்தம் கொடுத்தருளினார்.
சந்திரன் சாபம் போக்கிய தலம்
ஒரு பெரும் யாகம் செய்ய சந்திரன் விரும்பி குருவை அழைத்து இருந்தாா்.
குரு வரமுடியாமல் போகவே அவரின் இரண்டாவது மனைவி தாரையை அனுப்பி வைத்து இருந்தாா்.
யாகம் நல்லபடியாக முடிந்ததும் தாரை ஊா் செல்ல மறுத்து சந்திரனுடன் அவன் அழகில் மயங்கி இருந்துவிட்டாள்.
சந்திரனுடன் ஒரு குழந்தைக்கு தாயாகியும் விட்டால்,
குரு பிரகஸ்பதி வந்து
கூப்பிட்டும் போகாமல் இருந்து விடுகிறாள்.
சந்திரன் குருவை அலட்சியம் செய்து தாரையை போகக்கூட சொல்லாமல் இருக்கிறாா்.
குரு உன் சக்தி உன் அழகு அனைத்தும் அழியட்டும் என்று சாபம் இடுகிறார்.
சந்திரன் நடக்க கூட திரானியில்லாமல் 27 மனைவிகளை அழைத்துக் கொண்டு ஊா் ஊராக கோவில் அனைத்திற்கும் செல்கிறார்.
குருவின் சாபத்திற்கு
பயந்து எந்த தெய்வமும் அவரை மன்னிப்பதாய் இல்லை.
வாடி வதங்கிய சந்திரனை விசுவாமித்திரா் பார்த்து திருவிடைமருதூர் சென்று இறைவனை பாா் என்று சொல்கிறார்.
மேலும் உமாதேவி ஒரு முறை சிவனின் கண்ணை மூடும் போது உலகமே இருட்டாக ஆனபோது திருவிடைமருதூர் ஸ்ரீ ஜோதி மகாலிங்கம் மட்டும் ஜோதி ருூபமாய் காட்சி தந்து அந்த ஊா் மட்டும் இருட்டு இல்லாமல் ஈசன் செய்தார்.
உலகமே இருட்டாய் போன போது
அந்த ஊர் மட்டும் இருட்டாகமல்
அவ்வூரில் மட்டும் இயக்கம் பாதிப்படையவில்லை ஆகவே
அங்கே உள்ள ஈசன் உன் சாபங்களை போக்குவார் என சொல்ல....
27நட்சத்திரமும் சந்திரனும் திருவிடைமருதூர் வந்து சந்திர புஷ்கரனி வெட்டி
27 நட்சத்திரங்களாகிய அவரது மனைவிகள் 27 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனா்.
சந்திரன் தனது ஆத்மாவை ஆத்மலிங்கமாக ஆக்கி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து இறைவனை நாளும் வழிபட சிவன் மனம் குளிர்ந்து சந்திரனுக்கு இழந்த சக்தியை கொடுத்து மீண்டும் நவகிரகங்களில் ஒருவர் ஆக்கினார்.
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவிலில்் நவகிரகங்களில் சந்திரன் மட்டும் உயரம் கூடுதலாகவும் மற்றவர்கள் உயரம் குறைவாகவும் காணலாம்.
அகத்தியர்
உமாதேவியை நினைத்து தவம் செய்ய அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தார்.
உமயவளும் அகத்திய முனிவருக்கு காட்சி
அளித்தார்.
முனிவர்கள் அனைவரும் தேவியிடம் சிவபெருமானையும்
காண வேண்டும் எனக்கூறினர்.
முனிவர்களுக்காக இறைவனை எண்ணி உமாதேவி தவமிருக்கிறார்.
இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.
காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார்.
வியப்பு கொண்டு அம்பாள்
" இறைவா, பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே!" என்று வினவ
"உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே, நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர். அதனாலே பூசிக்கிறேன்" என்றார்.
முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெற்றனர் என்று தலவரலாறு கூறுகிறது.
தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் இது.
மார்க்கண்டேய முனிவர்
மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.
காசிபர்
சப்த ரிஷிகளில் ஒருவர்.
காசிபர் சிவனிடம் குழந்தை கிருஷ்ணனாக காட்சியளிக்க
வேண்ட..
சிவன் குழந்தை கிருஷ்ணனாக
மருதமரத்தடியில்
காட்சி கொடுத்தார்.
பிரணவ பிரகாரத்தில்
சிங்க கிணறு அருகில் மருத மரத்தின் கீழ் உள்ளது கிருஷ்ணர் விக்ரகம்.
ஆதிசங்கரர்
ஆதிசங்கரர் ஸ்ரீ ஜோதி மகாலிங்கத்தை தரிசனம் செய்து
"தான் செய்யும் அத்வைத பிரச்சாரம் சரியா என்று மகாலிங்கத்திடம் கேட்க"
இடியோசை முழங்க லிங்கம் இரண்டாகி ஒரு கை வெளிவந்து அத்வைதமே சத்யம், அத்வைதமே நிஜம் என திருவாய் மலர்ந்து ஆசிபுரிந்தது.
வரகுண பாண்டியன்
வரகுண பாண்டியன் பாண்டிய நாட்டு அரசன் சிவ பக்தர்.
ஒருமுறை வரகுண பாண்டியன் மதுரை அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.
மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.
அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது.
சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.
மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார்.
எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது.
சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான்.
அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான்.
வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன.
அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன.
ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை அம்மன் சன்னதி வழியாக
மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார்.
அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான்.
இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இந்த பிரம்மஹத்திக்கு, சிவன் சந்நிதி இரண்டாம் கோபுரத்தில் சிலை உள்ளது. அறியாமல் செய்த பாவம் நீங்க இதற்கு உப்பு மற்றும் மிளகிட்டு வணங்குகின்றனர்.
கருவூர்த்தேவர்
கருவூர்த்தேவர்
திருவிடைமருதூர் ஆலயத்தை அடைந்து இறைவனை அழைக்க
ஸ்ரீ மகாலிங்கசுவாமியாகிய இறைவனை
தன் தலையை சாய்த்து கரூவூரார் குரலுக்கு பதிலளித்தார்.
அதனால் இன்றளவும்
திருவிடைமருதூரில் ஸ்ரீ மகாவிங்கசுவாமியின்
இறைவனது திரு உருவம் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது.
கருவூர்த்தேவர். அவர் இயற்றிய 'திருவிசைப்பா' ஒன்பதாம் திருமுறையை சேர்ந்தது.
இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு)
இணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாகம் மேகலை அரையா
அகந்தொறும் பலிதிரி அடிகள்
தந்திரி வீணை கீதமும் பாடச்
சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
மருவிடம் திருவிடை மருதே.
கும்பகோணத்தில் இருந்து 10km
தொலைவில் உள்ளது
ஆலயம்
ஆலய முகவரி:
ஸ்ரீ மகாலிங்கசுவாமி ஆலயம்,
திருமஞ்சனம் தெரு,
திருவிடைமருதூர்-612 104.
தஞ்சை மாவட்டம்
தொலைபேசி எண்:-0435- 2460660
திருவிடைமருதூர் ஆலயம்
அன்றைய சோழநாட்டின் ஒரு பகுதியான கும்பகோணத்தின் அருகில் உள்ளது திருவிடைமருதூர். கும்பகோணத்தில் இருந்து சுமார் ஆறு அல்லது ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும் மாயவரத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்த ஊரில் காவேரி ஆற்றின் கரையில் உள்ள மிகப் பிரபலமாக ஆலயமே மகாலிங்கேஸ்வரர் எனும் சிவன் ஆலயம். இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதிகளின் பொறுப்பில் உள்ளது. இந்த ஆலயத்தில் பல்வேறு பெயர்களைக் கொண்ட 27 சிவலிங்கங்கள் உள்ளன.
இந்த ஆலயத்தில் பல சிறப்புக்கள் உள்ளன. இந்த உலகில் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுனா, புட்டார்ஜுனா மற்றும் திருவிடைமருதூர் போன்ற மூன்று இடங்களில் மட்டுமே மருத எனும் மரம் உள்ள விருஷத்தை தல விருஷமாகக் கொண்ட சிவன் ஆலயங்கள் உள்ளதாகவும் உள்ளதாகவும் அவற்றின் மத்தியில் திருவிடைமருதூர் ஆலயம் உள்ளதினால் இதை இடைமருதூர் என்று அழைக்கின்றார்கள்.
இந்த ஆலயம் உண்மையில் ஏழு பிராகாரங்களைக் கொண்டது என்கிறார்கள். அதில் முக்கியமானவை வீதிக்கு அடுத்த தேர் ஓடும் பிராகாரம் , அடுத்தது அஸ்வமேத பிராகாரம், அடுத்து பிரணவ பிராகாரம் அல்லது சித்திரப் பிராகாரம், கொடுமுடிப் பிராகாரம் போன்றவை . இவற்றில் நான்கு பக்கமும் சேர்த்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவு நீண்டு உள்ள அஸ்வமேத பிராகாரத்தை ஒரு முறை சுற்றி வந்தால் அஸ்வமேத யாகம் செய்தப் பலன் கிடைக்கும் என்கிறார்கள். அது போல பிரணவ பிராகாரத்தில் 32 தோற்றங்களைக் கொண்ட விநாயகரின் சிலைகளும் 108 நடன லட்ஷனன்களை எடுத்துக் காட்டும் சிவபெருமானின் நடராஜ தோற்றங்களும் உள்ளனவாம். ஆலய வளாகம் ஏழு கோபுரங்களைக் கொண்டு உள்ளது. இந்த ஆலயத்துக்கு நாங்கள் சென்ற நேரம் மதியம் என்பதினால் அனைத்தையும் பார்க்க முடியவில்லை.
இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமான் மகாலிங்கம் என அழைக்கப்படுகிறார். சிவபெருமான் தனக்குத் தானே இங்கே பூஜை செய்து கொண்டதான ஐதீகம் உள்ளதினால் இந்த ஆலயத்தின் மூலவரை – மகாலிங்கம் அனைவரையும் விட மிகப் பெரியவர் என பொருள் தரும் மஹா லிங்கம் – என அழைக்கின்றார்கள். இன்னொரு காரணம் தேவர்கள் அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு சென்றபோது இந்த ஆலயப் பகுதியிலும் அந்தப் பாத்திரத்தில் இருந்து சிறிதளவு சிந்தியதினால்தான் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்கள் அனைத்து தோஷங்களும் விலகி சிரஞ்சீவியாக வாழ்வார்கள் எனக் கூறுகிறார்கள். இங்குள்ள பார்வதியின் பெயர் பெறுநலமமுலை அம்மை அல்லது பிரஹத்சுந்தரி என்கிறார்கள் .
இந்த ஆலயத்தின் மற்றும் ஒரு விசேஷம் என்ன என்றால் எந்த ஒரு ஆலயத்திலும் மூலவரை சுற்றி இருக்குமாறு பரிவார மூர்த்திகள் எனப்படும் குடும்ப தெய்வங்கள் அங்காங்கு சன்னதிகளில் அமர்ந்து இருப்பார்கள். ஆனால் அந்தப் பகுதியை சேர்ந்த சோழ நாடு முழுவதுமே அமிர்தம் விழுந்த இடம் என்பதினால் மஹாலிங்க ஸ்வாமியின் ஆலயம் நமது கண்களுக்குத் தெரியும் வகையில் திருவிடைமருதூரில் இருந்தாலும், மஹாலிங்கர் எனப்படும் சிவபெருமான் ஆலயம் சூட்ஷும ரூபத்தில் சோழநாட்டின் ஒரு எல்லை முதல் அடுத்த எல்லை வரை விஸ்தரித்து இருப்பதினால் அவரை சுற்றி ஆலய வளாகத்துக்குள்ளேயே இருக்க வேண்டிய பரிவார தெய்வங்களான விநாயகர் திருவாஞ்சுலையிலும், முருகன் ஸ்வாமிமலையிலும், சோமஸ்கந்தர் திருவாரூரிலும், நடராஜர் சிதம்பரத்திலும், பைரவர் சீர்காழியிலும், நந்தி ஆடுதுரையிலும், தக்ஷிணாமூர்த்தி ஆலங்குடியிலும், சந்தேகேஸ்வரர் திருப்பாடியிலும், சூரியனார் ஆலயத்தில் அனைத்து நவகிரகங்களும் அமர்ந்து உள்ளார்கள் என்றும், நமது கண்களுக்குத் தெரியும் மஹாலிங்க ஸ்வாமியின் ஆலயம் சோழ நாட்டில் ஒரு சன்னதி மட்டுமே என்றும் ஐதீகம் உள்ளது.
இந்த ஆலயத்துக்கு வந்து வேண்டி வணங்குவத்தின் மூலம் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களினால் ஏற்பட்டு உள்ள அனைத்து தோஷங்களும், முக்கியமாக பிரும்மஹத்தி தோஷம் போன்றவை விலகும் என்ற ஐதீகம் உள்ளது. அதற்கான ஒரு கதைக் கூட வரகுண பாண்டியனின் வரலாற்றுக் கதையில் உள்ளது.
ஒருமுறை பாண்டிய மன்னனான வரகுண பாண்டியன் என்பவர் தன நாட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது இரவாகி விட அதி வேகமாக ஓடி வந்து கொண்டு இருந்த அவர் ஏறி வந்த குதிரையின் காலடிக் குளம்புகளால் மிதிக்கப்பட்டு வழியில் படுத்து இருந்த அந்தணர் ஒருவர் மரணம் அடைந்தார். அதை கவனிக்காமல் அந்த மன்னன் சென்று விட்டார். தவறுதலாக ஒரு பிராமணரைக் கொன்று விட அவருக்கு பிரும்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இறந்து போன பிராமணன் அவர் பின்னால் பிரும்மஹத்தியாக தொடர்ந்து சென்று கொண்டு மன வேதனையை அளித்து வந்தார். ஆகவே அந்த மன்னன் மதுரை சோமசுந்தரர் ஆலயத்தில் சென்று பிரும்மஹத்தி தோஷத்தைக் களைய பூஜை செய்தபோது அந்த மன்னன் கனவில் வந்த சிவபெருமான் தன்னை திருவிடைமருதூரில் வந்து வணங்கினால் அவரை தொடர்ந்து கொண்டு வந்து இருந்த பிரும்மஹத்தி பிரச்சனை முடிவுக்கு வரும் என்றார்.
அப்போது தஞ்சாவூர் சோழ மன்னன் ஆதிக்கத்தில் இருந்ததினால் பாண்டிய மன்னன் அந்த நாட்டின் மீதே படையெடுத்து சென்று சோழ மன்னனை விரட்டி விட்டு அந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டி இருந்தது . அவனை தொடர்ந்து வந்து கொண்டு இருந்த பிரும்மஹத்தியால் ஆலயத்துக்குள் நுழைய முடியாது என்பதினால் ஆலய வாயிலிலேயே அமர்ந்து கொண்டு மன்னன் வரவை எதிர்பார்த்து காத்து இருந்தது. ஆலயத்துக்குள் சென்ற மன்னனிடம் பண்டிதர்கள் பிரும்மஹத்தி தோஷத்தைக் களையும் பூஜை செய்து விட்டு பின் பக்க வாயிலினால் வெளியேறி விடுமாறு கூறினார்கள். ஆகவே மன்னன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த பிரும்மஹத்தி வாயிலிலேயே இன்றும் அமர்ந்து இருப்பதான ஐதீகம் உள்ளதினால் அந்த ஆலயத்துக்கு சென்பவர்கள் ஆலயத்தில் நுழைந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் இன்னொரு வழியே வெளியில் சென்று விட வேண்டும் என்கிறார்கள். ஆலயத்தின் நுழை வாயில் அருகில் முட்டி மீது தலையை வைத்துக் கொண்டு ஐயோ பாவம் என்பது போல ஒரு சிலை வைக்கப்பட்டு உள்ளது. அதுவே பிரும்மஹத்தியின் வடிவம் என்கிறார்கள்.
ஆலய விலாசம்
Sri Mahalinga Swamy Temple
Thirumanjana Street
Thiruvidaimarudur – 612 104.
Telephone 0435-2460660 (or) Mr. Baskar (+91-9244291908)