Breaking News :

Thursday, November 21
.

வெங்கடாஜலபதி கடனை அடைக்க வழிகாட்டிய திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்


கடவுள் இல்லை என்று சொல்பவர்களே இந்த கோவிலுக்குள் வந்தால் கதி கலங்கி போவார்கள் - 
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இந்த கோவில் வரலாறை படித்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது.
இக்கோவில் ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாம்.
தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி,திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டி தவம் செய்த இடமே இக்கோவில்.
தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப்படுகிறார். 
மேலும் வெங்கடாஜலபதி குபேரனிடம் கடனை தீர்க்க இக்கோவிலில் வந்து 11 கணபதிக்கு 11 தேங்காய் மாலை,11 வாழைப்பழ மாலையை அணிவிக்க உன் கடன் தீரும் என சிவபெருமான் கூறியதால் இக்கோவிலில் வந்து வெங்கடாஜலபதி கணபதியை வணங்க அவர் கடன் தீர்ந்தது.
இக்கோவில் 5000 வருட பழமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளே தான் சிவன் சுயம்புவாக உருவானார்.மேலும் இக்கோவில் சிவ பெருமான் வாசி என்ற கோடாரியால் மூங்கிலுக்கு கீழே எடுக்கும் போது அவர் மீது இரத்தம் வந்துவிட்டது. 
ஆதலால் இக்கோவில் சிவலிங்கை தொடாமல் தான் பூஜை செய்கிறார்கள்.பசு ஒன்று யாருக்கும் தெரியாமல் சிவனுக்கு பால் சுரந்து கொடுக்குமாம், அப்போது மூங்கில் தானாக விலகி சிவலிங்கத்தை பசுவுக்கு காட்டுமாம்.
இந்த ஊரில் சிறு மன்னன் ஒழுங்காக வரி கட்ட தவறியதால் கரிகால அரசன் பெரும் படையெடுத்தான். ஆனால் போரில் வெற்றி பெறுவதற்காக காளி உருவில் வானில் இருந்து அம்புமழை பொழிந்ததால் அவனுடைய பெரும்படைகள் அழிந்தது, மீண்டும் கரிகாலன் சிவனை வேண்டி போரில் வெற்றி பெற்றான்.
போரில் வெற்றி பெறுவதற்காக காளியை தனியே விநாயகர் மூலம் கட்டிவைத்தார் சிவபெருமான். அந்த காளியின் பெயர் சொர்ண காளி,தனி சந்நதி உள்ளது.
உன்னை இங்கு வரவழைக்கவே போரில் உன்னை ஜெயிக்க வைத்தேன் என கரிகாலனிடம் சிவன் கூறினாராம். இக்கோவிலை கட்ட கரிகாலனுக்கு ஆதிசங்கரர் உதவி புரிந்திருக்கிறார்.
ஆதிசங்கரர் வந்தார் என்பதற்கு ஆதாரம் தான் அவர் கையால் வரைந்த ஸ்ரீ சக்கரம். இக்கோவிலின் சொர்ணபைரவர் தெற்கு பார்த்து இருப்பார்.
முக்கியமான விஷயம் இது ஒரு கேது ஸ்தலம். மிக மிக மிக அருமையான கோவில். தெய்வமில்லை என்பவர்கள் இங்கு வந்தால் கண்டிப்பாக தெய்வத்தை காணலாம்.

வெங்கடாஜலபதி கடனை அடைக்க வழிகாட்டிய திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்

   
சென்னையை அடுத்து திருவள்ளூர் அருகே உள்ளது வாசீஸ்வரர் திருத்தலம். தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.

வெங்கடாஜலபதி கடனை அடைக்க வழிகாட்டிய திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்
சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி. இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன். பூலோகத்தில் பிறந்த பார்வதி தேவி, சிவனை நோக்கித் தவத்தில் ஆழ்ந்தார். இளகிய மனம்கொண்ட ஈசன், தேவியின் தவத்திற்கு இரங்கி அம்பாளை ஏற்றுக்கொண்டார்.

பூலோகத்தில் அம்பாள் தவம்புரிந்த இடம் திருப்பாச்சூர். இங்கே ஈசன் அழைத்த திருநாமத்தினாலயே ‘தங்காதலி’ என்னும் பெயருடன் அம்மன் அருளாட்சி செய்து வருகிறார். இந்த அன்னையை வழிபடும் தம்பதியரிடையே ஒற்றுமை கூடும், அன்னியோன்யம் அதிகரிக்கும்.

 
சென்னையை அடுத்து திருவள்ளூர் அருகே உள்ளது இந்தத் திருத்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், தவம் ஆகிய ஐம்பெரும் சிறப்பம்சங்களோடு, மூவரால் பாடல் பெற்ற புராணப் பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்டது இந்த ஆலயம். தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.

புராண காலத்தின் போது, திரிபுராந்தர்களை அழிக்கச்சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டு விட்டார். இதனால் வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்து விட்டது. அத்தோடு ஒரு சபையை அமைத்த விநாயகர், ‘தம்மை வணங்காமல் சென்றது ஏன்?’ என்று சிவபெருமானிடம் விசாரணை செய்தார். அதனடிப்படையில் இவ்வாலயத்தில் 11 விநாயகர்கள் வீற்றிருக்கும் ‘விநாயகர் சபை’ இருக்கிறது. இந்த ஏகாதச விநாயகர் சபை வழிபாடு மிகுந்த பலனளிக்கக்கூடியது.

திருப்பதி வெங்கடாஜலபதி தம் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க, இந்த விநாயகர் சபை வழிபாட்டை மேற்கொண்ட பிறகுதான் வழிபிறந்தது என்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தம் திருமணத்தின்போது குபேரனிடம், வெங்கடாஜலபதி கடன் வாங்கினார். எவ்வளவு முயற்சித்தும் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக, வெங்கடாஜலபதி சிவபெருமானை வழிபட்டார்.

அதற்கு ஈசன், “திருமணத்தின்போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவார்கள். 16 என்பது பதினாறு வகை செல்வங்களைக் குறிக்கும். நீங்கள் மச்ச அவதாரத்தின்போது அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் காரணமாக, 11 வகை செல்வங்களை இழந்துவிட்டீர்கள். இப்போது ஐந்து வகை செல்வங்களே தங்களிடம் உள்ளன. இழந்த செல்வங்களைப் பெற விநாயகர் சபையிலுள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, ஒரு அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம். அதன் மூலம் கடனை அடைக்க வழிபிறக்கும்” என்று அறிவுறுத்தினார்.

அதன்படி இந்த விநாயகர் சபையில் வழிபாடுகளை மேற்கொண்டாராம், வெங்கடாஜலபதி. அதன்பிறகே, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிகள் ஏற்பட்டனவாம். பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் கிட்டும், வியாபாரம் பெருகும் என்று நம்புகிறார்கள்.

புராணப் பின்னணியைக் கொண்ட இந்த சேத்திரத்தில் ஆலயம் நிர்மாணித்தது கரிகாற் பெருவளத்தான். குறும்பன் என்ற சிற்றரசன், கரிகாற் பெருவளத்தானுக்குக் கப்பம் கட்டி ஆட்சிசெய்து வந்தான். திடீரென கப்பம் செலுத்த மறுத்தான். இதனால் சிற்றரசன் மீது போர் தொடுத்தான் கரிகாற் சோழன். குறும்பனும் தம் குலதெய்வமான காளி தேவியை வணங்கி போர் புரியத் தொடங்கினான். அவனுக்கு உதவியாக காளிதேவி விண்ணிலிருந்து அம்புகளை எய்து சோழர்படை வீரர்களை அழித்தாள். விண்ணிலிருந்து பாய்ந்து வந்த அம்புகளும், அவற்றை எய்யும் காளிதேவியும் சோழர்படை வீரர்கள் கண்களுக்குப் புலப்படவேயில்லை.

இதனால், அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து சோழர்படை வீரர்களும் போரில் கொல்லப்பட்டனர். சோழர் படைத்தளபதி மட்டும் உயிருடன் இருந்தார். அவரை வரவழைத்த குறும்பன், ‘உன் மன்னன் போருக்கு வந்தாலும் கொல்லப்படுவது உறுதி. இந்தத் தகவலை சொல்வதற்குத்தான் உன்னை உயிரோடு விட்டுள்ளேன். இதை கரிகாலனிடம் போய்ச் சொல்!’ என்று திருப்பி அனுப்பினான்.

நடந்ததை கரிகாலனிடம் கூறினார் தளபதி. தம் படை வீரர்கள் மாண்டதையறிந்து வேதனையுற்ற கரிகாலன், படை திரட்டிக் கொண்டு போருக்கு விரைந்தான். கல்மூங்கில் புதர்கள் நிறைந்த இப்பகுதிக்கு வந்தபோது, சிற்றரசனுக்கு தம்முடைய படையை தோற்கடிக்கும் பெரிய ஆற்றல் எப்படி வந்தது என்ற வியப்புடன், சிவபெருமானை நினைத்து வேண்டினான்.

அப்போது சிவபெருமான் அசரீரியாய் தன் பக்தனுக்கு ஆறுதல் கூறினார். ‘‘கவலைகொள்ள வேண்டாம் மன்னா! நான் உன் அருகிலேயே இருக்கிறேன். சிற்றரசனுக்கு அவன் குலதெய்வம் காளிதேவி உதவிபுரிகிறாள். உன்னை இங்கு வரவழைக்கவே இந்த நிகழ்வுகள் நடந்தேறின. குறும்பனுக்கு இந்த தகவல் தெரியாது. நான் சொன்ன பிறகு போரைத் தொடங்கு! நீ வெற்றி கொள்வாய்!” என்றார்.

பின்னர் ஆவேசமாகவுள்ள காளிதேவியை சாந்தப்படுத்த இரண்டு தங்கச் சங்கிலிகளுடன் நந்தியை அனுப்பினார் சிவ பெருமான். தங்கச் சங்கிலியைக் கண்டதும் சினம் தணிந்து சிரித்தாள் காளி. அவளை தங்கச் சங்கிலியால் கட்டி அழைத்து வந்து, ஓரிடத்தில் உட்கார வைத்தார் நந்தி.

இதைத் தொடர்ந்து சிவபெருமான் கரிகாலனிடம், ‘இப்போது நீ போரைத் தொடங்கு!” என்றார். மூங்கில் புதர்கள் மத்தியில் மறைந்திருந்தபடியே ஒற்றன் மூலம் போருக்கு தகவல் அனுப்பினான் கரிகாலன். குறும்பனும் போர்புரிய சம்மதித்தான். கடும் போரில் கரிகாலன் வெற்றிபெற்றான். போரில் தோற்ற குறும்பனின் சொத்துகள் அனைத்தையும் ஈசனுக்குரியதாக ஆக்கினான் கரிகாலன்.

தமக்கருகில் இருப்பதாய்ச்சொன்ன ஈசனை மூங்கில் காட்டுக்குள் தேடியலைந்தான். எங்கு தேடியும் ஈசன் தென்படவில்லை. அங்கிருந்த மூங்கில் புதருக்குள் வசித்த காட்டுவாசி களிடம் கேட்டான். அவர்கள், ‘சிவலிங்கம் இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு புதருக்குள் பசு மாடு செல்லும். அப்போது மூங்கில் மரங்கள் விலகி நிற்கும். மாடு திரும்பிச் சென்றதும் மூங்கில் மரங்கள் தானாக மூடிவிடும்’ என்றுகூறி அந்த புதரைக் காட்டினர்.

அங்கு சென்று மூங்கில் வெட்ட பயன்படுத்தப்படும் ‘வாசி’ என்ற அரிவாளால் வெட்டிக்கொண்டே இருந்தான் மன்னன். அப்போதும் லிங்கத்தைக் காணாது சலிப்படைந்த கரிகாலன் ஆவேசமாக ஒரு மூங்கில் மரத்தை வெட்டினான். திடீரென ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. திடுக்கிட்டு அருகில் சென்று பார்த்தான். சுயம்புலிங்கம் நெற்றியில் வெட்டுப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உள்ளம் உருக ஈசனிடம் மன்னிப்புக் கேட்டதும் ரத்தம் வடிவது நின்றது. இறைவனின் கருணைக்கு தாம் முற்றிலும் ஆட்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த கரிகாலன், அவ்விடத்திலேயே ஈசனுக்கு ஆலயம் நிர்மாணிக்க உறுதிபூண்டான்.

ஆலயப் பணி தொடங்கிவிட்டது. ஆனால் போரில் தோற்றவர்கள் கோவில் எழுப்ப இடையூறு கொடுக்கத் தொடங்கினர். இதனால் திருப்பணி மந்தமானது. கரிகாலன் அடிக்கடி வருகை புரிந்து தொல்லை கொடுத்தவர்களை விரட்டியடித்து, மேற்பார்வையிட்டு கோவில் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்தினான். திருப்பணி நிறைவு பெற்று கம்பீரமாக ஆலயம் உருப்பெற்றது. புராணப்பெருமையும், சரித்திரப் பின்னணியும் கொண்ட ஒப்பற்ற தலம் இது. 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் இறைவன் திருநாமம் வாசீஸ்வரர் ஆகும்.

இத்திருத்தலத்தில் அம்பாள் தினமும் ஈசனுக்கு அபிஷேகம்செய்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே பிரதோஷத்தின் போதும், இதர உற்சவங்களின்போதும் முதலில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறும். அம்பாள் சிவனுக்கு வலப்புறம் உள்ளதால், இத்திருக்கோவில் திருமணத்தடை நீக்கும் சேத்திரமாக விளங்குகிறது.

இதையடுத்து 11 விநாயகர் கம்பீரமாக வீற்றிருக்கும் ‘விநாயகர் சபை’ உள்ளது. அருகில் பெருமாளின் வினைதீர்த்த ஈஸ்வரனும் எழுந்தருளியுள்ளார். மூன்று சன்னிதிகளையும் கடந்து சென்று சுயம்புவாய் வீற்றிருக்கும் திருப்பாசீஸ்வரரை வழிபடலாம். கஜ பிருஷ்ட விமானம் கொண்ட கருவறையில், சதுரவடிவ பீடத்திலுள்ள சுயம்புலிங்கத்தின் தலையில் வெட்டுப்பட்ட தடம் உள்ளதைக் காணலாம். சிவலிங்கத்தின் மேற்பகுதி சற்று இடப்புறத்தில் நகர்ந்த நிலையில் உள்ளது. காயம்பட்ட லிங்கம் என்பதால் தொட்டுப் பூஜை செய்வதில்லை. அலங்காரங்கள் பாவனையாகத்தான் நடக்கின்றன. இம்மூர்த்தியைத் ‘தீண்டாத் திருமேனி’ என்றும் அழைக்கிறார்கள்.

இவ்வாலயத்தில் ஐயாயிரம் வருட பழமையான மூங்கில் மரம், தல விருட்சமாக உள்ளது. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. வெளிப்பிரகாரத்தில், வடமேற்கில் சொர்ண காளி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அருகே வசந்த மண்டபம் செல்லும்வழியில் இரட்டைக் காளியும், மண்டபத்தினுள் மிகப்பெரிய குபேரலிங்கமும் உள்ளது.

தாழம்பூ வழிபாடு :

தம்முள் யார் பெரியவர் என பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஏற்பட்ட போட்டியில், நடுவராய் விஸ்வரூபமெடுத்த சிவபெருமானின் தலைமுடியைக் கண்டதாகப் (பிரம்மாவுக்கு ஆதரவாக) பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளிலிருந்து ஒதுக்கிவைத்தார் சிவபெருமான். பின்னர் சிவனிடம் மன்னிப்புக்கேட்டு தாழம்பூ அடைக்கலம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்குப் பயன்படுத்தும்படி வரம் கொடுத்தார். அதனடிப்படையில் இக்கோவிலில் சிவராத்திரி அன்று மட்டும் இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில்வைத்துப் பூஜை செய்கின்றனர். இந்த பூஜையை தரிசனம் செய்தால் ஆணவம், பொய் சொல்லும் குணம் நீங்கிவிடும்.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும்.

அமைவிடம்

திருவள்ளூர் மாவட்டம், சென்னை- அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ., திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்பாசூர் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.