Breaking News :

Sunday, December 22
.

உடையார் iஈஸ்வரன் கோவில் திருக்களாவுடையார்


பத்தாம் நூற்றாண்டில் ராஜேந்திரச் சோழன், வெண்ணிப்போருக்கு தயாராகிக்கொண்டிருந்தான். ஓரிடத்தில் களாச் செடிகள் நிறைந்திருந்த காடு இருந்தது. அங்கு தன்னுடைய ஆயுதங்களை மறைவாக வைத்தான். அப்படி வைக்கும்போது ஒரு சிவலிங்கம் அவனது கண்ணில் பட்டது.

அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய பிரம்மன், “படைப்புத் தொழிலால் உண்டான கர்வம் காரணமாக நான் பாவத்திற்குள்ளானேன். அந்த பாவம் நீங்க ஈஸ்வரரை வேண்டினேன். அவர் என்னை பூலோகத்திற்குச் சென்று சதுர்வேதங்களையும் தீர்த்தங்களாக அமைத்து, இங்குள்ள களாக் காட்டுக்குள் லிங்கத்தை வழிபட்டு வந்தால் பாவம் நீங்கி, மீண்டும் படைப்புத் தொழிலைச் செய்யலாம் என்று அருளினார். நான் வழிபாடு செய்த லிங்கத்தையே நீ இன்று கண்டாய். நீ நான்கு புறமும் தீர்த்தம் அமைத்து அதன் நடுவில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பி வழிபடு” என்று கூறி மறைந்தார்.

மன்னனும் அவ்வாறே செய்தான். திரிபுவன மாதேவிப் பேரேரி என்னும் பெரிய குளத்தை நான்கு புறமும் அமைந்தாற்போல் வெட்டினான். அதன் நடுவே ஆலயத்தை அமைத்து, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். களாச் செடிகளுக்கு இடையே இருந்து கிடைத்ததால் இத்தல இறைவனுக்கு ‘கரவிந்தீஸ்வரர்’ என்றும், இந்த ஊர் ‘கரவிந்தீஸ்வரம்’ என்றும் அழைக்கப்படலானது. நான்கு வேதங்களும் நான்கு புறமும் நீராக அமைய அதன் நடுவே இத்தல இறைவன் வீற்றிருக்கிறார். எனவே திருக்களா உடையார் என்ற பெயரும் இறைவனுக்கு உண்டு. அதோடு அந்த பெயராலேயே இந்த ஊரும் ‘உடையார் கோவில்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது.

இத்தல இறைவனின் பெயர், திருக்களாவுடையார், 
கரவந்தீஸ்வரர் என்பதாகும். 
அம்மனின் திருநாமம், தர்மவல்லி. இந்த அன்னை, தர்மமே படர்கொடியாக விளங்குபவள். இந்த ஆலயத்தின் தல விருட்சமாக களாச்செடி உள்ளது. இந்தச் செடியோடு நன்னாரி கொடியும் படர்ந்திருப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு. ஆதியில் இந்த ஆலயம் ‘கரவிந்த வனம்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்தக்கோவிலின் பெருமைகளைப் பற்றி கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கோவிலின் கிழக்கில் உள்ள குளத்தின் பெயர், ‘ரிக் வேத தீர்த்தம்’. பங்குனி மாத பவுர்ணமி நாளில் இந்த குளத்தில் நீராடினால் புண்ணியங்கள் வந்து சேரும். தெற்கு பக்கம் உள்ள குளத்தின் பெயர், ‘யஜுர் வேத தீர்த்தம்’. ஆனி மாத வளர்பிறையில் வரும் அஷ்டமி திதியிலும், சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போதும் இந்த தீர்த்தத்தில் நீராடினால், செல்வ வளம் பெருகும். மேற்கு பகுதியில் உள்ளது ‘சாம வேத தீர்த்தம்’. அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், திருவாதிரை நட்சத்திர தினத்திலும் இந்த தீர்த்தக் குளத்தில் நீராடி வந்தால், ஞானத்தை அடையலாம். வடக்கில் இருப்பது ‘அதர்வண வேத தீர்த்தம்’. இந்த தீர்த்தத்தில் நீராடினால் சகல சவுபாக்கியங்களும் பெறலாம். சந்ததிகளுக்கு நன்மைகள் வந்து சேரும். இந்த தீர்த்தத்தில் நீராடும்போது பஞ்சாட்சர மந்திரத்தை பாராயணம் செய்தால், துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

இந்த ஆலயத்தை வலம் வருவது, இந்த பூமியையே வலம் வந்ததற்கு சமம் என்று சொல்கிறார்கள். சித்ரா பவுர்ணமி அன்று இந்த நான்கு தீர்த்தங்களிலும் நீராடி வழிபாடு செய்து வந்தால் வேண்டிய வரத்தைப் பெறலாம். இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. மூன்று பிரகாரங்கள் உள்ளன. முன் கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. உள்கோபுரம் இரண்டு நிலைகளைக் கொண்டது. இரண்டாம் பிரகாரத்தின் தெற்கில் நந்தவனம், கோவிலுக்கு வெளியே வசந்த மண்டபம், கோவிலுக்கு எதிரில் திருக்குளம், விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சன்னிதிகள் அமைந்திருக்கின்றன.

உட்பிரகாரத்தில் மேற்கு வரிசையில் முக்குறுணி விநாயகர், பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தபுரீஸ்வரர், இரட்டைப் பிள்ளையார், முருகன் சன்னிதி, வேதபுரீஸ்வரர், சதுர்வேதபுரீஸ்வரர், கஜலட்சுமி, பூலோகநாதர் சன்னிதிகளும், வடக்கில் திருக்களா விருட்சம், சண்டிகேஸ்வரர் சன்னிதியும், கிழக்கில் வாகன மண்டபம், மடப்பள்ளி அமைந்துள்ளன. உள் மண்டபத்தில் மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர். இந்த ஆலயத்தில் சரஸ்வதிக்கு அருகிலேயே ராகு-கேது இருக்கின்றனர். எனவே ராகு-கேது திசை நடைபெறுபவர்கள், இங்கு வந்து சரஸ்வதியை வழிபட்டால் தீமைகள் குறையும்.

பிரம்மதேவன் பூலோகம் வந்து கரவந்தீஸ்வரரை வழிபட்டதற்கு ஆதாரமாக, இத்தல சிவலிங்கத்தின் பாணத்தில் பிரம்மன் அமர்ந்த பூஜை செய்வது போன்ற அமைப்பு காணப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டையில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் ஒரு அலங்கார வளைவு உள்ளது. அதில் நுழைந்து தெற்கில் சென்றால் உடையார்கோவிலை அடையலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.