Breaking News :

Wednesday, February 05
.

உலகளந்த பெருமாள் இடது கால் தூக்கிய நிலையில்?


ஆதிசேஷன் மற்றும் மகாபலிக்காக எம்பெருமான் திரிவிக்கிரமனராக பிரம்மாண்டமாக அவதாரம் செய்த திருத்தலம். காண்பதற்கே அரிய திருக்கோலமான திரிவிக்கிரமன் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது சிறப்பம்சம்.

ஆதிசேசன் மீது ஆனந்தமாய் படுத்துறங்கும் இறைவன் நாராயணன் எடுத்த அவதாரங்களில் ஒன்று திரிவிக்கிரம அவதாரம். அதாவது மகாபலியின் ஆணவத்தை அடக்க வாமன (குள்ள) ரூபமாக உலகம் முழுவதும் அளந்தார்.

ஆகவே, இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனின் திருவடி பட்டதால், எங்கு வாழ்ந்தாலும் புண்ணிய லோகமே என்பதில் மாற்றமில்லை.

திருமால் கிடந்து அருளும், ஆதிசேசன் என்னும் சர்ப்பம் திரிவிக்கிரமன் என்னும் திருக்கோலத்தைக் காண வேண்டியதாகவும், அதன் காரணமாகவே உலகளந்த பெருமாளாக மிகப் பெரிய திருமேனியாக காட்சி தந்து அருளியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் மூலவர் சன்னிதியிலேயே சிறிய சன்னிதியில், பெருமாளை சேவித்தவாறு காட்சி தந்து அருள்கிறார்.

அதேபோல் மகாபலிச் சக்கரவர்த்தியும் பெருமாளின் திருக்கோலத்தைக் காண வேண்டியதாகவும் அவருக்காக எம்பெருமான் பாதாள லோகத்திலேயே இத்திருக்கோலத்தைக் காட்டி அருளியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

இத்தல இறைவன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும்.

இரண்டு கரங்களை நீட்டி சேவை சாதிக்கும் பெருமாள், இடதுகையில் இரட்டைவிரலை உயர்த்திக் காட்டியிருக்கிறார். இந்தியாவிலேயே இத்தகைய வித்தியாசமான அமைப்பு இங்கு தான் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இத்திருக்கோவிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயர் அருள்வது மிகச்சிறப்பு.

இத்திருக்கோவிலிலுள்ளே உலகளந்த பெருமாள், திருநீரகம், திருக்காரகம், கார்வானம் என நான்கு திவ்யதேசங்கள் உள்ளன. இந்த நான்கு பெருமாளையும் சேர்த்து திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

இத்தலத்தை திருமழிசை ஆழ்வார் – 2 பாசுரம், திருமங்கையாழ்வார் – 4 பாசுரம் என 6 பாசுரம் பாடியருளியுள்ளனர்.””கல்லெடுத்து கல்மாரி காத்தாய் என்றும்
காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாயென்றும்
வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும்
மல்லடர்ந்து மல்லரை யன்றட்டா யென்றும்
மாகீண்ட கைத்தலதென் மைந்தா வென்றும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே யென்று
துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே!!!”
– திருமங்கையாழ்வார்.

மகாபலி அசுர குலத்தைச் சேர்ந்தவராகவே இருந்தாலும் நல்லவன். தான தர்மங்களில் அவனை மிஞ்ச ஆள் கிடையாது. இதனால் அவனுக்கு மிகுந்த கர்வம் ஏற்பட்டது. பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மூன்றடி நிலம் கேட்டார்.

“தாங்களே குள்ளமானவர், உங்களது காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே!! அது எதற்கும் பயன்படாதே!” என்றான். அதைக்கேட்ட குலகுருவான சுக்கிராச்சாரியார், வந்திருப்பது விஷ்ணு பகவான் என்பதை அறிந்து அவன் செய்யும் தானத்தைத் தடுத்தார்.

கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால் இதுவரை செய்த தானங்கள் வீணாகிவிடும் என்பதால் மூன்றடி கொடுக்கச் சம்மதித்தான் மகாபலி.

பெருமாள் தனது திருவடியால் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை பாதாளத்திலும் வைத்து மற்றொரு அடி நிலம் எங்கே?? என்று கேட்டார்.

அகந்தை படிந்த மகாபலி தன் தலையைக் குனிந்து இதோ என் தலை, இந்த இடத்தைத் தவிர வேறு ஏதுமில்லை என்றான். அவனை அப்படியே பூமியில் அழுத்தி பாதாளத்திற்கு அனுப்பினார்.
பாதாளம் சென்ற மகாபலி பெருமாளின் பாதம் பட்டு பாதாள லோகம் வந்து விட்டோமே, தன்னால் அவரது உலகளந்த திருக்காட்சியை காண முடியவில்லையே என வருந்தினான். எனவே, பாதாள லோகத்திலேயே உலகளந்த திருக்கோலம் காட்ட வேண்டி பெருமாளைக் குறித்து, மகாபலி கடுந்தவம் இருந்தார். இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் இத்தலத்தில் உலகளந்த திருக்கோலத்தைக் காட்டினார்.

இவனோ பாதாள லோகத்தில் இருந்தான். எனவே, அவனால் பெருமாளின் திருக்கோலத்தை முழுமையாகத் தரிசிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் பெருமாளிடம் மன்றாடினான்.

பெருமாள் மகாபலிக்கு காட்சி தருவதற்காக இதே இடத்தில் ஆதிசேஷனாகக் காட்சி கொடுத்தார். இந்த இடமே “திருஊரகம்” என அழைக்கப்படுகிறது. இது உலகளந்த பெருமாளின் மூலஸ்தானத்திற்கு இடது பக்கத்தில் உள்ளது.

ஒரே பிரகாரத்தில் நான்கு திவ்யதேசத்தைக் கொண்டுள்ள திவ்யதேசம். பெருமாள் உலகத்தை அளக்கும் கோலத்தில் மிகப் பெரிய திருமேனியாகக் காட்சி தரும் திருத்தலம். திருமகள் தாயார், அமுதவல்லி நாச்சியார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.

அமைவிடம்: திருக்கோயிலூர் - திருவண்ணாமலையில் இருந்து 38 கிமீ தூரத்திலும், விழுப்புரத்தில் இருந்து 38 கிமீ தூரத்திலும் உள்ளது

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.