Breaking News :

Friday, March 14
.

வடபழநி ஆண்டவர் கோயில், வட பழநி


மூலவர் – வடபழநி ஆண்டவர்.
தீர்த்தம் – திருக்குளம்.
ஆகமம் – சிவாகமம்.
பழமை – 500 வருடங்களுக்கு முன்.
ஊர் – வடபழநி.
மாவட்டம் – சென்னை.
மாநிலம் – தமிழ்நாடு.

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

அண்ணாசாமி தம்பிரான் :
இவர்தான் இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர். நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர். இவர்தன் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து, பழநியிலிருந்து வாங்கி வந்த பழநிஆண்டவர் படத்தை அங்கு வைத்துப் பூஜை செய்தவர். இவர் வைத்துப் பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தினசாமி தம்பிரான் :
இவரும் ஆண்டவருக்குப் பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான்.

பாக்யலிங்க தம்பிரான் :
இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்பகிருகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர். இவரும் வடபழநி கோயிலுக்குப் பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்க தொடங்கியது. இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது. இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.

பழநிக்கு செல்ல இயலாத பக்தர்கள் இத்தலத்து ஆண்டவரை வழிபடுவது நலம். சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு. சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலம் ஆதலால் இத்தலத்து இறைவனை வணங்குவது சாலச் சிறந்தது. சென்னை மாநகரின் புகழ்வாய்ந்த தலமாக திகழும் கோயில். உண்டியல் வருமானம் மிக அதிக அளவில் அரசுக்கு வரும் தலங்களில் இது முக்கிய தலம். ராஜகோபுரம் 72 அடி உயரம்.

அண்ணாச்சாமி, ரத்தினசாமி, பாக்கியலிங்கம் ஆகிய முருக பக்தர்களுக்குத் தனித்தனி சன்னதி உள்ளது.
இத்தலத்தில் காலணிகளுடன் முருகன் அருள்பாலிப்பது விசேஷம். அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு. இவர் முருகனுக்கு மிகவும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்குத் தங்க தேர் உள்ளது.

திருவிழா:
சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் 11 நாட்கள் வீதி உலா பெருந்திருவிழா ஆனி, ஆடி, ஆவணி சுவாமி வீதி உலா, ஐப்பசி கந்த சஷ்டி 6 நாட்கள், பங்குனி கிருத்திகை லட்ச்சார்ச்சனை 3 நாட்கள், தெப்பதிருவிழா 6 நாட்கள்.

பிரார்த்தனை:
இங்குள்ள வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க, வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம். கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வருகிறார்கள்.

நேர்த்திக்கடன்:
வேண்டியதெல்லாம் தரும் வடபழநி ஆண்டவர் சன்னதியின் முக்கிய நேர்த்திகடன் முடி காணிக்கையாகும். தவிர வேல் காணிக்கை, ரொக்கம் போன்றவற்றை உண்டியலில் செலுத்துகிறார்கள். தவிர உண்டியல் காணிக்கை இக்கோயிலின் மிக முக்கிய வருமானம் ஆகும். பால், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் ஆகிவற்றாலான அபிசேகங்கள் சுவாமிக்கு நேர்த்திகடனாக நடைபெறுகின்றன.

இருப்பிடம் :
சென்னை நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. சென்னையின் பிற முக்கிய பகுதியிலிருந்து வடபழநிக்கு பஸ் வசதி உள்ளது.

நன்றி : சோழ.அர.வானவரம்பன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.