Breaking News :

Thursday, November 21
.

வைகாசி விசாகம் முருகனுக்கு விசேஷம் ஏன்?


வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படுகிறது.*
இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு முருகனின் அருளும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனை வணங்கி எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.

வருடத்தை ஆறு காலங்களாக வகுத்த நம் முன்னோர்கள் சித்திரை, வைகாசி இரண்டு மாதங்களையும் இளவேனில் காலமாகப் பிரித்தனர்.

இடபம் என்பது வைகாசி மாதத்தைக் குறிக்கும். முற்காலத்தில் நட்சத்திரங்களைக் கணக்கிடும்போது கார்த்திகையை முதலாவதாகக் கொண்டு கணக்கிட்டார்கள்.

அதன்படி கணக்கிட்டால் விசாகம் பதினான்காவது நட்சத்திரம் ஆகும். அதாவது இருபத்தியேழு நட்சத்திரங்களில் நடுவில் இருக்கும் நட்சத்திரம் விசாகம். முற்காலத்திலும் வைகாசி விசாகம் சிறந்த விழாவாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

வைகாசி என்பதை விகாஸம் என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள்.

வைகாசியே வடமொழியில் வைஸாகம். வைணவர்கள் இம்மாதத்தை மாதவ மாதம் என்றழைப்பார்கள். சித்ரா பௌர்ணமிக்கு அடுத்து வரும் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருவதால்தான் அந்த மாதத்திற்கு வைகாசி என்ற பெயர் வந்தது.

முருகனுக்கு விழா:-

விசாகம், ஞான நட்சத்திரம். முருகப் பெருமானுக்குரிய விழாக்களாக தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் இவையாவும் சிவனோடும் சம்பந்தப்பட்டவை. முருகனது தனிப்பட்ட விழாக்களில் விசாகமும் ஐப்பசி சஷ்டியுமே மிக முக்கியமானவை.

சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர்களை காத்தருள சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.

இந்தத் தீப்பொறிகள் வாயு, அக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையோ அவற்றை சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு வந்து சேர்ந்ததும் அவை வைகாசி விசாகத்தன்று ஆறு குழந்தைகளாக மாறின. விஷ்ணு பகவான் கார்த்திகைப் பெண்கள் மூலமாக அக்குழந்தைகளுக்கு பாலூட்டி விட்டார்.

ஆறுமுகம் கொண்ட முருகன் தோன்றி தேவர்களைக் காத்தருளிய இந்நாளில் முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர்.
இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும் மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும் கோலாகலமான விழாவும் நடைபெறுகின்றன.

மகாபாரதத்தின் வில் வித்தகனான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள். பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று. வைகாசி விசாக சுப தினத்தில் தான் திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடிய அற்புத நாள்.

ராமலிங்க அடிகளார் தன் சத்யஞான சபையை வடலூரில் நிறுவிய தினம். இந்நாளில் தானமும், தர்மமும் செய்தால் நல்லது. தயிர்சோறு, மோர், பானகம் போன்ற குளிர்பான தானம், குலம் தலைக்கும் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

முருகன் அவதரித்த வைகாசி விசாக தினத்தில் பிறப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன், பல புகழ்களை அடைவார்கள் என கருதப்படுகிறது.

வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது.

வைகாசி பௌர்ணமி புத்த பூர்ணிமாசித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே வைகாசி விசாக நாளில்தான்.

நேபாளத்தில் கபிலவஸ்து பேரரசர் சுத்தோனா கெளதமாவின் குமரன் சித்தார்த்தர் எனும் கெளதம புத்தர் வைகாசி விசாக புண்ணிய நாளில் தான் ஞானத்தை அடைந்த நாளாக கருதப்படுகிறது.

வைகாசி விசாகம் தினத்தை முன்னிட்டு எல்லாம் வல்ல இறைவன் ஸ்ரீ முருகப் பெருமானின் திவ்ய தரிசனம் பெறுவோம்.! வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்.!

*வேல் வேல் வீர வேல்*
*வேல் வேல் வெற்றிவேல்*
*வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா*
*வீரவேல் முருகனுக்கு அரோகரா*
*ஆறுபடை முருகனுக்கு அரோகரா.*

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.