Breaking News :

Sunday, December 22
.

வேதநாராயண பெருமாள் சமேத வேதநாயகி தாயார் கோவில்!


திருநாராயணபுரத்தில் பிரசித்தி பெற்ற வேதநாராயண பெருமாள் சமேத வேதநாயகி தாயார் கோவில்.

திருச்சி- சேலம் சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 56 கி.மீ. தொலைவில் உள்ளது தொட்டியம். இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாராயணபுரம். இங்கே அழகிய கோயிலில் இருந்தபடி உலகையே ரட்சித்து வருகிறார் ஸ்ரீவேதநாராயண பெருமாள்.

தாயார்- ஸ்ரீவேத நாயகித் தாயார். பெருமாள், தாயார் இருவரும் ஞானம் வழங்கி அருளும் அற்புதத் தலம் இது.

காவிரியின் வடகரையில் உள்ளது இந்தத் தலம். ஸ்ரீகம்பத்தடி அனுமன், ஸ்ரீகருடாழ்வார் ஆகியோ ரைத் தரிசித்தபடி உள்ளே செல்ல... அழகு கொஞ்சும் திருமுகத்துடன் திகழும் ஸ்ரீவேத நாராயணரைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம். சிவனாருக்கு உகந்த வில்வ மரம்; அந்த மரத்தடியில் பெருமாளின் திருவடிகள்; அருகில் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தனிச்சந்நிதியில் இருப்பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள்.

நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார் ஸ்ரீதிருமால் என்பது ஐதீகம். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் ஸ்ரீபூதேவியும் இருக்க... கீழே பிரகலாதன் மூன்று வயதுக் குழந்தை வடிவில் காட்சி தருவது அழகு!

மகாபலிச் சக்கரவர்த்தி மைசூரை நோக்கிப் படையெடுத்துச் சென்றார். வழியில் மண்மேடாக இருந்த இடத்தில் ஓய்வு எடுத்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய பெருமாள், 'இங்கே பூமிக்கு அடியில் இருக்கும் என்னை மேலே எழுந்தருளச் செய்து, கோயில் எழுப்பு. இனி, உனக்கு ஜயம்தான்!’ என அருளினார்.

அதில் நெக்குருகிப் போன மன்னர், விடிந்ததும் பெருமாளின் திருவிக்கிரகத்தைப் பூமியில் இருந்து எடுத்து, பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபட்டுச் சென்றார். அதுமட்டு மின்றி, அங்கே ஒரு கிராமத்தை உருவாக்கி, அதற்குத் திருநாராயணபுரம் என்று பெயர் சூட்டி, கிராமத்தையும் நிலங்களையும் தானமாக அளித்து விட்டுச் சென்றார்; பிறகு மைசூரை வென்றார் என்கிறது ஸ்தல வரலாறு.

பிரகலாதனைக் காப்பதற்காகவும் இரணியனை வதம் செய்வதற்காகவும் ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்தார் அல்லவா திருமால்! பிறகு பிரகலாதன், 'பெருமாளே! தங்களை சாந்த ரூபமாகத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவேண்டும்’ என வேண்ட... 'திருநாராயணபுரத்துக்கு வா!’ என்று அழைத்தார் திருமால். அதன்படி, இங்கே சாந்த ஸ்வரூப மூர்த்தி யாக இருந்து, தன்னை நாடி வரும் அன்பர்களுக்கெ ல்லாம் அருள் வழங்கி வருகிறார் ஸ்ரீவேதநாராயண பெருமாள் என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்ரீபிரம்மாவின் கர்வத்தை ஒடுக்குவதற்காக, இங்கே ஸ்ரீவேதநாராயணராக இருந்து ஸ்ரீபிரம்மாவுக்கு வேத ஞானம் செய்தருளினார். ஸ்ரீவேதநாராயண பெருமாள், குரு ஸ்தானத்தில் இருந்தும் புதனுக்கு அதிபதியாக இருந்தும் அருள்பாலிக்கும் தலம் என்பதால், இங்கு வந்து வேண்டிக்கொண்டால், கல்வியும் ஞானமும் கைகூடும் என்கின்றனர், பக்தர்கள். கம்பத்தடியான் சந்நிதியில் நின்று சத்தியம் செய்யும் வழக்கம் இங்கு உண்டு.

27 அகல் தீபமேற்றி, நம் ஜாதகத்தைப் பெருமாளின் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட் டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். ஐந்து நெய்விளக்கேற்றி, வெண்தாமரை மலரால் அர்ச்சித்து வழிபட, தொழில் விருத்தியாகும்; வியாபாரம் செழிக்கும்.

கல்வி ஞானம் வேண்டுவோர், ஐந்து நெய்தீபமேற்றி, புத்தகம் மற்றும் பேனாவை ஸ்ரீவேதநாராயணரின் திருவடியில் வைத்து அர்ச்சித்து வழிபட்டால், கல்வி மேம்படும்; ஞானம் சிறக்கும்; தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது உறுதி எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.