தண்தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்றது வேலாயுதம்.
அது சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. அத்தகைய ஒப்பற்ற சக்திமிக்க தனியாண்மை கொண்ட நெடுவேலாயுதம் தோன்றி, முருகன் கையில் வெற்றி வேலாயுதமாக நிலை பெற்ற வரலாற்றை அனேக புராணங்கள் சிறப்பாகக் குறித்துள்ளன.
காசிபமுனிவருக்கும், அசுர குலத் தோன்றலாகிய மாயைக்கும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி ஆகியோர் பிறந்தனர். சூரபத்மனும் அவனது தம்பியரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டனர். தவத்தின் பயனாக, சூரபத்மன் சிவபெருமானிடம் 1008 அண்டங்களையும், 108 யுகங்கள்வரை ஆளும் வரத்தைப் பெற்றான். தம்பியரான தாரகனும் சிங்கமுகனும் வரங்களைப் பெற்றனர். அவன் தான் பெற்ற வரபலத்தால் எட்டுத் திக்கிலும் படை நடத்தி, எல்லோரையும் அடிமைப் படுத்தினான்.
அவனைக் கண்டு தேவர்கள் ஓடினர். அவர்கள் கடலில் மீனாகவும், காட்டில் பறவைகளாகவும் மறைந்து வாழ வேண்டியதாயிற்று. அவன் இந்திரனின் மகனான ஜயந்தனையும் அவனது தோழர்களையும் கிரெளஞ்ச மலையில் சிறை வைத்தான். ஒரு கட்டத்தில் அளவு கடந்து இனி தாங்க முடியாது என்ற நிலைமை உண்டாயிற்று. தேவர்கள் எல்லோரும் கூடிச் சிவபெருமானைச் சரணடைந்தனர். சிவபெருமான், அவர்களிடம், ‘‘அஞ்சாதீர்! அசுரர்களை அழித்து ஒழிக்கத்தக்க ஒருமகனைத் தருகிறேன். அவனால் உங்கள் கவலைகள் விரைவில் தீரும்,’’ என்று கூறித் தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.
அதன் வெப்பம் தாங்காது அனைவரும் பயந்து அங்கிருந்து ஓடினர். அக்னிதேவன் அந்த ஆறு தீப்பொறிகளையும் எடுத்துச் சென்று கங்கையிடம் அளித்தான். அவள் அவற்றைத் தனது உற்பத்தித் தானமாகிய நாணற்காட்டில் இருந்த சரவணப் பொய்கையில் விட்டாள். அங்கு அவை ஆறும் அழகிய குழந்தைகளாக உருப்பெற்றன. சிவனும், பார்வதியும் அங்கு சென்றனர். பார்வதிதேவியார் அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர வாரி அணைத்தாள்.
அக்கணத்தில் அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாகி, ஆறு திருமுகங்களும், பன்னிரண்டு தோள்களும், இரண்டு திருவடிகளும் கொண்ட அழகிய குமரனாகியது. உமையவள் அவனுக்குக் கந்தன் என்று பெயர் சூட்டினாள். கார்த்திகைப் பெண்களிடம் அவனை வளர்த்து வரச் சொன்னாள். கந்தனோடு நவவீரர்களும் தோன்றினர். கந்தன் நவவீரர்களுடன் சில காலம் விளையாடி மகிழ்ந்தான். பிரணவத்திற்குப் பொருள் உரைத்தும். நாரதர் செய்த வேள்வியில் தோன்றிய ஆட்டை வாகனமாக ஏற்றும், அவன் பல திருவிளையாடல்களை நிகழ்த்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் சென்று, முருகனைத் தங்களுக்குத் தலைவனாக அனுப்பிச் சூரனையும், அவனது கூட்டத்தாரையும் அழித்துத் தமக்கு இன்பம் வழங்கி வாழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சிவபெருமான் முருகனை அழைத்து, ‘‘குமாரனே! நீ விரைந்து சென்று சூரனாதியரை வென்று தேவர்களுக்கு வாழ்வு தருக’’ என்று ஆணை மொழிந்தார். பிறகு சிவபெருமான் தனது அம்சமான பதினோரு ருத்திரர்களின் அம்சத்திலிருந்து பதினோரு ஆயுதங்களை அளித்தார். பிறகு உமாதேவியிடம், ‘‘முருகனுக்கு ஆயுதமொன்றை வழங்குக’’ என்றார்.
அம்பிகை ஒப்பற்ற ஆற்றல் கொண்டதும், விரைந்து செல்வதும், பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தைப் படைத்து அவரிடம் அளித்தாள். இதுவே வேல் பிறந்த கதையாகும். சிவசக்தியரின் அம்சமாகவே வேல் தோன்றியது. கந்தபுராணம் உற்பத்தி காண்டம் - விடைபெறு படலத்தில் சிவபெருமான், முருகப்பெருமானுக்கு ஆயுதங்களை அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
அது வருமாறு :
சூரபத்மன் முதலான கொடிய அரக்கர்களின் சேனையை வெல்லப் போர்க்கோலம் பூண்டு நின்ற முருகப்பெருமானிடம் சிவபெருமான் பதினோரு உருத்திரர்களையும் முறையே, 1. தோமரம், 2. கொடி, 3. வாள், 4. குலிசம், 5. அம்பு, 6. அங்குசம், 7. மணி, 8. தாமரை, 9. தண்டம், 10. வில், 11. மழு எனும் பதினோரு ஆயுதங்களாக்கி அளித்தார். பின்பு ஐந்து பூதங்களையும் ஒரு சேர அழிக்கக்கூடியதும் எவர் மேல் விடுத்தாலும், அவருடைய வலிமைகளையும் வரங்களையும் கெடுத்து உயிரைப் போக்கக்கூடியதும் அனைத்துப் படைக்கலங்களுக்கும் தலைமையானதும் ஆகிய வேலாயுதத்தைப் படைத்து முருகக்கடவுளிடம் கொடுத்தார். இதனை,
‘‘ஆயுதற் பின்னர் ஏவில் மூதண்டத்து
ஐம்பெரும்பூதமும் அடுவது
ஏய பல்லுயிரும் ஒருதலை முடிப்பது
ஏவர்மேல் விடுக்கினும் அவர்தம்
மாயிருந் திறலும் வரங்களும் சிந்தி
மண்ணியில் உண்பது எப்படைக்கும்
நாயகமாவது, ஒரு தனிச் சுடர்வேல்
நல்கியே மதலை கைக் கொடுத்தான்.’’
- என வரும் கந்தபுராணச் செய்யுளால் அறியலாம். இவ்வாறு சிவபெருமான் முருகனுக்கு வேல் கொடுத்த வரலாற்றைக் கூறுவது புராண மரபு எனப்படும். ஆனால், நடைமுறையில் அன்னை பராசக்தியே முருகப்பெருமானுக்கு வேலாயுதத்தை வழங்கினாள் என்று கூறப்படுகிறது. அதையொட்டியே ஆலயங்களில் அம்பிகையின் சந்நதியில் முருகன் வேல் வாங்கும் ஐதீக நாடகம் நடந்து வருகிறது. முருகனுக்குப் பராசக்தி வேல் தந்ததாகக் கூறும் மரபு ஐதீக மரபு எனப்படும். உமாதேவியார் முருகனை அழைத்து, ‘வாழ்க வாழ்க’ என்று சொல்லி, வேல் அளித்ததைப் போற்றி திருச்செந்தூர் திருப்புகழில் ஸ்ரீஅருணகிரிநாத சுவாமிகள், ‘எம் புதல்வா வாழி! வாழி! எனும்படி வீரானவேல் தர’ என்று குறிப்பிடுகின்றார். இப்படி முருகன் வேலாயுதம் பெற்றது பற்றி இரண்டு கருத்துகள் இருப்பினும் இரண்டையும் ஒன்று சேர்த்து முருகனுக்கு சிவபெருமான் வேலாயுதத்தைத் தர, பராசக்தியான உமாதேவியார் அதற்கு அளப்பரிய சக்திகளைக் கொடுத்தாள் என்று ஆன்றோர் கூறுவர்.
(இதற்கு எடுத்துக்காட்டாகத் திருக்கோலக்காவில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பொன் தாளம் தர அதற்குப் பெருமாட்டி ஓசைதந்து ஓசை கொடுத்த நாயகி என்று பெயர் பெற்று விளங்குவதைக் கூறுவர்.) கதைகள் பல இருப்பினும் தாய் தந்தையார் அளிக்க வேலாயுதத்தை முருகப் பெருமான் வேலைப் பெற்றார் என்பதும், பகைவரை அழித்து உலகிற்கு நன்மை பயக்கச் சிவசக்தியர் அருளாக வேல் பிறந்தது என்பதும் எண்ணி மகிழத்தக்கதாகும்.
அன்னை சக்தியிடம் முருகன் வேல் வாங்கும் ஐதீக நாடகம்
தேவர்களுக்குப் பெருந்துன்பத்தை விளைத்த சூரபத்மனையும், அவனது அசுரர் கூட்டத்தையும் அழிக்கச் சிவபெருமான் முருகப்பெருமானைத் தோற்றுவித்து அவருக்கு உருத்திரர்களின் அம்சமான பதினோரு படைக்கலங்களையும் அளித்தார். பின்னர் பராசக்தி தனது சக்தி அம்சத்திலிருந்து வேலாயுதத்தைத் தோற்றுவித்து முருகப்பெருமானுக்கு அளித்தார். அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை முருகன் ஆலயங்களில் ஐதீக விழாவாக நடத்துகின்றனர். சூரசம்ஹார விழாவின் அங்கமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சக்தியிடம் வேல் வாங்கும் விழா என்பது பெயர். பெரிய சிவாலயங்களிலும் சிறப்புமிக்க முருகன் ஆலயங்களிலும் சில அம்மன் கோயில்களிலும் மகா கந்தர் சஷ்டியினை ஒட்டி நடத்தப்படும் பெருவிழா சூரசம்ஹார பெருவிழாவாகும். இது பெரும்பாலும் தீபாவளிக்கு மறுநாளான பிரதமையில் தொடங்கி சஷ்டிகளில் நிறைவு பெறும். இதனைக் கந்தர் சஷ்டி விரதம் எனவும் அழைப்பர்.
பிரதமையில் தொடங்கி முருகனுக்கு இந்த ஆறு நாட்களிலும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும். சில ஆலயங்களில் முருகனுக்கு எதிரேயுள்ள கொடிமரத்தில் கொடியேற்றி, காலையும் மாலையும் முருகன் வீதி உலா நடத்தப்படுகிறது. இவ்விழாவின்போது முருகன் சூரபத்மனையும் அவனது அசுரக் கூட்டங்களையும் அழிக்கும் ஐதீக நாடகம் நடத்தப்படும். இந்த நாடகத்தில் முருகன் நவவீரர், நாரதர் ஆகியோரின் வேடம் தரித்து ஒரு கூட்டமும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி, பானுகோபன், அவனது சேனாதிபதிகள் மற்றோர் கூட்டமும் ஆக இரண்டு பிரிவினராக இருந்து நாடகத்தை நடத்துகின்றனர். இந்த இரு சாரருமே காப்பு கட்டிக் கொண்டு விரதமிருப்பர். சூரசம்ஹார நாளான சஷ்டியன்று பிற்பகலில் முருகன் நவவீரர்கள் நாரதர் வேடமிட்டவர்கள் கூட்டமாக அம்பிகை சந்நதியின் முன்பு நிற்பர். அலங்கரிக்கப்பட்ட முருகன் திருவுருவத்தை எடுத்து வந்து அம்பிகை சந்நதிக்கு நேர் எதிரில் நிறுத்துவர்.
முதலில், நாரதர் வேடம் தரித்தவர் காசிப முனிவனுக்கு மாயையிடம் சூரபத்மனும் தம்பி தங்கையரும் அசுரக் கூட்டங்களும் பிறப்பது; அவர்கள் தவம்; 1008 அண்டங்களை 108 யுகங்கள் ஆண்டது; அசுரர்கள் தேவர்களுக்குத் துன்பம் இழைத்தது; தேவர்கள் துன்பம் தாள மாட்டாமல் சிவபெருமானைச் சரண் அடைந்தது; சிவபெருமான் முருகனைப் படைத்து அளித்தது; முருகன் பல்வேறு திருவிளையாடல்கள் புரிந்தது; தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் முருகனை அழைத்து சூரபத்மனை அழித்து வர ஆணை தந்தது; முருகன் அதை ஏற்றுக் கொண்டு அன்னையின் அனுமதி வேண்டி அவள் வாயிலில் நிற்பது வரையிலான கதையைச் சுருக்கமாக பாடலாகவோ, விருத்தமாகவோ, உரை நடையாகவோ கூறுவார். பின்னர் அம்பிகையைத் துதித்துப் பாடல்கள் பாடப்படும். அம்பிகை ஆசி வழங்குவதுடன் வேல் தருவதாகக் கூறும் பாடல்கள் பாடப்படும். அதன் பின்னர் சர்வ வாத்தியங்களும் முழங்க அம்பிகைக்கும் முருகனுக்கும் ஏக காலத்தில் தீபாராதனை நடக்கும். பின்னர் அர்ச்சகர் அம்பிகையின் கையில் வைக்கப்பட்டிருக்கும் அலங்கரிக்கப்பட்ட வேலை எடுத்து வந்து முருகன் திருக்கரத்தில் வைப்பார்.
ஊர்ப் பெரியவர்கள், ஊர்ப் பொதுவில் வழிபடப்படும் கனத்த இரும்பு வேலாயுதத்தை எடுத்து வந்து முருகன் வேடமிட்டவரிடம் அளிப்பார். உடனிருக்கும் நவவீரர்கள் வேடம் புனைந்தவர்கள் வில்லம்பு அல்லது நெடிய பட்டாக்கத்தியைத் தாங்குவர். அவர்கள் அம்பிகையை வணங்கி, சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்திற்கு வீதிஉலாவாகச் செல்வர். முருகனைக் குதிரை அல்லது ஆட்டுக்கடா வாகனத்தில் அமர்த்தித் தம்முடன் எடுத்துச் செல்வர். இதுவே பராசக்தியிடம் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி, ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குக் குறையாமல் நடக்கும். எண்ணற்ற தலங்களில் இத்தகைய வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றாலும், அவற்றில் தலையானதாக இருப்பது சிக்கலில் நடைபெறுவதுதான். ‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்பது பழமொழி. சிக்கலில் வேல் வாங்கும்போது முருகன் திருமேனியில் வியர்ப்பது இன்றும் நடக்கும் அதிசயம். முருகனுடன் தோன்றிய வீரவாகுதேவரின் வம்சத்தில் வந்தவர்கள் என்று புராணம் போற்றும் செங்குந்தர்களான கைக்கோளர்கள் பெரும்பாலான ஊர்களில் சூரசம்ஹார நாடகத்தினை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் செட்டியார்கள் நடத்துகின்றனர்.
சிவபெருமானிடமிருந்து முருகன் வேல் வாங்குதல் பொதுவாக சூரசம்ஹார விழாவில் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியே அனைத்து ஆலயங்களிலும் நடத்தப்படுகிறது. அபூர்வமாக சில தலங்களில் சிவபெருமானிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சூரசம்ஹாரத்தின்போது முருகன் சபைக்கு எழுந்தருள்கின்றார். அவரோடு அன்பர்களும், ஐதீக நாடகத்தில் பங்கு பெறும் முருகன், நவவீரர்கள், நாரதர் முதலியோரும் சபைக்கு வருகின்றனர். நடராஜரின் இடப்பக்கத்தில் இருக்கும் சிவகாமி அம்பிகையின் கரத்தில் வேல் வைக்கப்பட்டு தீபாராதனை ஆனதும் அது முருகன் திருக்கரத்தில் வைக்கப் படுகிறது. பின்னர் முருகன் அன்பர்களும் ஐதீக நாடக நடிகர்களும் தொடர சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளுகின்றார். முருகன் முத்துக்குமாரசுவாமி என்னும் பெயரில் கோலாகலமாக வீற்றிருக்கும் வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழாவில் முருகன், கருவறைக்கு முன்பாக எழுந்தருளி மூலவரான வைத்தியநாத சுவாமியிடமிருந்தே வேலாயுதத்தைப் பெறுகிறார். இவை மகா கந்தபுராணத்தில் சிவபெருமான் முருகனுக்கு வேலாயுதத்தை அளித்ததை அடியொற்றி நடத்தப்படுவதாகும்.
கந்தன் உண்டு கவலை இல்லை மனமே.
நமது பாதை முருகப் பாதை...
நமது உலகம் கந்தலோகம்.
வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
வேல் முருகா வேல்