நெற்றிக்கண், வில்-அம்புடன் அருளும் வில்லுடையான்பட்டு என்னும் வேலுடையான்பட்டு ஸ்ரீ சிவசுப்ரணியர்.
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்ரமணியர் அருள்பாலிக்கும் திருத்தலம் வேலுடையான் பட்டு, நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பங்குனி உத்திரத்தின்போது நாள் முழுவதும் பாலபிஷேகம் நடைபெறும் திருத்தலம் வேலுடையான்பட்டு.
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்டுள்ள திருத்தலம் வேலுடையான்பட்டு.
ஸ்ரீ சிவசுப்ரமணியர் தன் கரத்தில் வில்லுடன் அருளும் திருத்தலம் வேலுடையான்பட்டு.
ஸ்ரீ சிவசுப்ரமணியர், ஸ்ரீ வள்ளிதேவசேனாவுடன் அருளும் மூலவர் சிற்பம் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள திருத்தலம் வேலுடையான்பட்டு.
புராணக் காலத்தில் இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்ததாகவும், முருகப் பெருமானின் தரிசனம் வேண்டி, முனிவர்களும் தேவர்களும் இந்தப் பகுதியில் நீண்ட நாட்கள் தவம் மேற்கொண்டதாகவும், அவர்களுடைய தவத்துக்கு இரங்கிய முருகப்பெருமான், முதலில் ஜோதியாகவும், பின்னர் வில்லும் அம்பும் ஏந்திய வேடுவராகவும் திருக்காட்சி அளித்தாகவும், அவர்கள், தங்களுக்கு தரிசனம் தந்த முருகப் பெருமானுக்கு சிறப்பான ஆலயம் அமைத்து வழிபட்டதாகவும், காலப் போக்கில் அச்த ஆலயம் மண்மேடிட்டு மறைந்துவிட்டதாகவும், அந்த விவரம் அறிந்து பதிமூன்றாம் நூற்றாண்டில் சித்திர காடவ பல்லவ வம்ச அரசரால் தற்போதைய திருக்கோயில் கட்டப்பட்டதாகவும் கூறப்படும் திருத்தலம் வேலுடையான்பட்டு.
இந்தக் கோயில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் தான் கோயிலை நிர்வகித்து வருகிறது. மூலவர் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர்., உற்சவரோ கடலில் கிடைத்தவர். ஆம். இங்குள்ள உற்சவர் சிலை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டு, கோயிலில் வழிபாட்டுக்கு வைக்கப் பட்டது.
பட்டீஸ்வரத்திலிருந்து சுமார் ஆறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆவூரில் உள்ள ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயிலிலும் மூலவர் ஸ்ரீ சுப்ரமணியர் வில்லுடன் அருள்பாலிக்கும் மற்றொரு திருத்தலம் ஆகும். இவர் ஸ்ரீ தனுஷ் சுப்ரமணியர் என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
திருக்கடவூர், சாயாவனம், திருவாவடுதுறை சிவாலயங்களில் உள்ள ஸ்ரீ முருகப் பெருமானின் உற்சவத் திருமேனிகள் வில்லேந்தியவாறு அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.