Breaking News :

Thursday, November 21
.

கலியுகத்தில் ஒரு வைகுண்ட மூர்த்தியைக் காண வேண்டுமா?


குருவாயூர் செல்லுங்கள் என்கின்றனர் சித்தர்கள். 

அப்படி என்ன விசேஷம்? 

பூரண அவதார மூர்த்தியாகிய ஸ்ரீகிருஷ்ணனே, பூலோக மக்கள் உய்யும் பொருட்டு, வைகுண்டவாசியாகிய ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து பெற்று வந்த விக்கிரகமாகும் ஸ்ரீகுருவாயூரப்பன். 

அப்படிப்பட்ட வைகுண்ட மூர்த்தி உறையும் குருவாயூரில் ஸ்ரீ குருவாயூரப்பனைத் தரிசிக்க முறை ஏதும் உண்டோ என்பதை அறிந்து கொள்ள விருப்பம் பூண்டவராக ஸ்ரீ அகத்திய மகரிஷி ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை நாடி வருகின்றார். 

அகத்தியர் : 

மாயாவதாரப் பிரபோ! மாதவா! உன்னைக் குருவாயூரில் தரிசித்துப் பெரும்பேறு பெற்றேன்! ஆனாலும் ஐயனே, மாயையில் சிக்கி வாழும் மனிதனுக்கு அதிலிருந்து விடுபட்டு உன்னை உணர, குருவாயூரில் ஏதேனும் வழி வைத்துள்ளனையோ? 

இதைத் தெரிந்து கொள்ளவே அடியேன் இங்கு வந்தேன்.

கிருஷ்ணன்  : 

முனி சிரேஷ்டரே! உமக்கு வந்தனம். அனைத்தையும் அறிந்து உணர்ந்தவர் தாங்கள். தங்களுக்குத் தெரியாதா? இருப்பினும் அந்த இரகசியத்தைச் சொல்லுகின்றேன். மக்களுக்கு அறிவிப்பீர்களாக! 

குருவாயூரை முறையாகத் தரிசிப்பவர்களுக்கு வைகுண்டத்தில் நிச்சயம் இடமுண்டு.. குருவாயூரில் என்னைக் காண வரும் பக்தன், முதலில் மம்மியூர் சென்று அங்கு சிவபெருமானைத் தரிசித்து என்னுடைய அருள் பூரணமாகக் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும். 

அகத்தியர் : 

பிரபோ! முதலில் சிவனைத் தரிசிக்க வேண்டும் என்கிறீர்களே! 

அதன் காரணத்தை அடியேனும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்!

கிருஷ்ணன் : 

அடியேனுக்குக் குருவாயூரில் இடப் பிச்சை அளித்தவனே மம்மியூர் சிவபெருமான் என்பதைத் தாங்கள் அறிவீர்களே? 

ஆம் முனிவரே மம்மியூர் மகேசனைத் தரிசித்த நிலையில், அந்தப் பக்தன் அடுத்ததாக “வைகுண்ட பாதசக்தி” அம்மனைத் தரிசிக்க வேண்டும். இன்னவள் குருவாயூர் ஆலயத்தின் பின்பக்கத்தில் வலப்புறமாக வீற்றிருப்பாள்.

அகத்தியர் : 

அன்னவளைப் பற்றி அடியேன் தெரிந்து கொள்ளலாமா!

கிருஷ்ணன் : 

ஸ்ரீவித்யா லோகத்திலிருந்து மகரிஷிகளால் பூலோகத்திற்கு கொண்டு வரப்பெற்ற மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் அவள். அன்னவள் தன்னிடம் வந்த அந்தப் பக்தனுக்கு வைகுண்டவாசிகளுக்கு உரித்தான பாதசக்தியைத் தந்து அருள் பாலிக்கின்றாள். 

இதன் பிறகு என் திருக்கோயிலுக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும். இப்பொழுதுதான் பக்தன் என்னைத் தரிசிக்கும் பெரும் பேறு பெறுகிறான். இந்நிலையில் பக்தனாகிய அவன் என் அருளைத் தவிர எதையும் கேட்கமாட்டான்.

அகத்தியர் : 

அதாவது உன்னைத் தரிசிக்கும் போது லௌகீகமாக எதையுமே வேண்டக் கூடாது என்கிறாயா கிருஷ்ணா? 

கிருஷ்ணன் : 

ஆம் முனிவரே! வைகுண்டத்தில் இடம் என்றால் எளிதானதா! 

பக்தியுடன் வலம் வந்து இவ்வாறு வணங்கிய நிலையில் பக்தன் என்னுடைய பிரகாரத்திலேயே மம்மியூரப்பனை நோக்கித் தொழுது நன்றி தெரிவிக்க வேண்டும்.! 

அகத்தியர் : 

ஆஹா முகுந்தா, இப்பொழுது அந்தப் பக்தனுக்கு வைகுண்டத்தில் இடம் உண்டா? 

கிருஷ்ணன் : 

ஆம் உண்டு, ஆனால் இன்னும் ஒன்று பக்தனுக்கு உள்ளதே! 

அவன் “நெல்லு” காண்பானேயாகில் வைகுண்டத்தில் இடத்தைப் பற்றி யாம் யோசிப்போம்” 

(இதைக் கூறிவிட்டு கிருஷ்ணன் மறைந்து விடுகிறான்)

அகத்தியர் பலவாறாக யோசித்துப் பார்த்தும் “நெல்லு” என்பதன் அர்த்தம் புரியாததால் விளக்கம் காண யோகத்தில் அமர்ந்து விடுகிறார். பல வருடங்கள் தவம் கொண்ட நிலையில் “நெல்லு” என்பதன் விளக்கத்தை உணர்கிறார். 

குருவாயூரிலிருந்து சிறிது தொலைவில் நெல்லுவாய்புரம் என்ற ஊர் ஒன்று உண்டு. அங்கு கிருஷ்ணன் அமிர்த தன்வந்திரியாக அமர்ந்துள்ளான். இதைத் தான் அவன் மறை பொருளாக “நெல்லு” என்று கூறிவிட்டான் என்பதை உணர்ந்தவராய் நெல்லுவாய்புரம் சென்று பெருமானைத் தொழுது நின்றார்.

எம் பெருமானும், “முனி  சிரேஷ்டரே! இங்குதான் குருவாயூரப்பன் தரிசனம் சம்பூரணமாகிறது”, என்று அசரீரியாய் ஒலிக்க அகத்தியரும் அன்னவனுடைய பக்தியில் திளைத்து நிற்கிறார்.

கனிந்த கனி காஞ்சிமாமுனி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீகுருவாயூரப்பனை இம்முறையில் தரிசித்து  வழிகாட்டியுள்ளார்.

... குருமங்கள கந்தர்வா சத்குரு‌ ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த சுவாமிகள் அருள்உரை

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.