Breaking News :

Thursday, November 21
.

பழனி மலை முருகனின் பூஜைகள் என்ன?


மலைமேல் முருகனுக்கு நடக்கும் பூஜைகளைப் பற்றிப் பார்ப்போம்.
விஸ்வரூப தரிசனம்: (காலை 6 மணி)முருகன் தன்னுடைய திருக்கோலத்தில், அண்டசராசரங்களிலுள்ள அனைத்தையும் காட்டி நிற்பதே அவரது விஸ்வரூப தரிசனம் எனப்படும். 

முருகன் இத்தரிசனத்தை போர்க்களத்தில் சூரபத்மனுக்குக் காட்டி அருளினார். அதைக் காண, நாரதரும் மஹாவிஷ்ணுவும் செந்தூருக்கு எழுந்தருளினார் என்கிறது தலபுராணம். 

துவார விநாயகர், தீபாராதனையும், பள்ளியறை தீபாராதனையும் முடிந்த பின்னர் மூலவருக்கு தீபாராதனை செய்யப்படும். பின்னர் இறைவன் திருமேனியில் சாத்தப்பட்டிருக்கும் ராக்கால சந்தனமும், கௌபீன தீர்த்தமும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

 திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை ஓதுவார்கள் அமைதியான காலை வேளையில் பாடுவதைக் கேட்க புல்லரிக்கும்.

விளா பூஜை: விளா பூஜையின் போது பழநி ஆண்டவன், தாமே தமது ஆத்மார்த்த மூர்த்தியாகிய சிவபெருமானை பூஜித்து வழிபடுவதாகக் கொள்வது ஐதீகம். 

ஆண்டவனுக்கு இடது பக்கத்தில் ஸ்படிகலிங்க வடிவில் ஈஸ்வரனும், அம்பிகையும், சாளக்கிராமமும் ஒரு பேழையில் வைக்கப்பட்டுள்ளன.

 முதலில் ஆத்மார்த்த மூர்த்திக்கு அபிஷேகங்கள், தூப, தீப, நைவேத்தியமும், ஏக தீபாராதனையும் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். 

ஏனைய கால பூஜைகளில் ஆத்மார்த்த மூர்த்திக்குத் தனி அபிஷேகம் இல்லை. இக்காலபூஜையில், பழநி ஆண்டவருக்குக் காவி உடையோடு வைதீக கோலத்தில் அலங்காரம் செய்யப்படும்.

 ஓதுவார்கள் பஞ்சபுராணங்கள் பாடுவர்.
சிறுகால சந்தி: (காலை 8 மணி)
ஆண்டவருக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைக்குப் பின் நைவேத்தியம், ஏகதீபாராதனை காட்டி, பிரசாதம் வழங்கப்படும்.

 இப்பூஜையின் போது பழநி ஆண்டவருக்குக் குழந்தை வடிவில் அலங்காரம் செய்யப்படும். முருகன் திருக்கோலங்களுள் அவரது குழந்தைக் கோலம் தனிச் சிறப்புடையது. 

காலசந்தி: (காலை 9 மணி)சிறுகால சந்தியினைப் போலவே வழிபாடு நிகழும்.உச்சிக்காலம்: (பகல் 12 மணி)ஆண்டவருக்கு அபிஷேக அலங்கார அர்ச்சனைகள் செய்த பின்பு நைவேத்தியம் செய்து பதினாறு வகையான தீபாராதனைகள் செய்யப்படுகின்றன.

1. அலங்கார தீபம் 
2. நட்சத்திர தீபம் 
3. ஐந்துமுக தீபம் 
4. கைலாச தீபம் 
5. பாம்பு வடிவ தீபம் 
6. மயில் தீபம் 
7. சேவல் தீபம் 
8. யானை தீபம் 
9. ஆடு வடிவ தீபம் 
10.புருஷாமிருக தீபம் 
11. பூரணகும்ப தீபம் 
12. நான்குமுக தீபம் 
13. மூன்று முக தீபம் 
14. இரண்டு முக தீபம் 
15. ஈசான தீபம்
 16. கற்பூர தீபம்.

பின்னர் வெண்சாமரம், கண்ணாடி, சேவற்கொடி, விசிறி, ஆலவட்டம். இக்காலத்தில் ஆண்டவனுக்குக் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம் செய்யப்படும்.

தீபாராதனைக்குப் பின்னர் தேவாரம் இசைத்தலும், கட்டியம் கூறலும் நடைபெறும். சிறப்பு தினங்களில் இவற்றோடு கந்தபுராணம் சொல்லலும் வேதம் ஓதுதலும், நிகழும். உச்சிகால அன்னதான அறக்கட்டளை ஒன்றும் பழநி ஆண்டவர் கோயிலில் எற்படுத்தப்பட்டுள்ளது.

 அன்னதானத் திட்டத்தின் கீழ் அதற்கென பக்தர்களிடமிருந்து வசூலிக்கப்படும் குறிப்பிட்ட தொகை வங்கியில் முதலீடு செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டியில் அன்றாடம் மலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.

சாயரட்சை (மாலை 5.30 மணி)

 ஆண்டவனுக்கு அபிஷேக, அலங்கார அர்ச்சனைகள் செய்து முடிக்கப்பட்டதும் நைவேத்யம் செய்யப்படும். பதினாறு வகை தீபாராதனைகளும் சிறப்பு உபசாரங்களும் நடைபெற்ற பின் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும்.

 ஆண்டவனுக்கு அரச கோலத்தில் அலங்காரம் செய்யப்படும்.
இராக்காலம் (இரவு 8 மணி) ஆண்டவருக்கு அபிஷேக அலங்கார அர்ச்சனைக்குப்பின் நைவேத்யம் செய்து, ஏக தீபாராதனை முடிந்த பின்னர் அன்பர்களுக்குத் தினை மாவு முதலான பிரசாதங்கள் வழங்கப்படும்.
.
இராக்கால பூஜையில் தூய சந்தனம் இறைவன் திருமேனியில் சாத்தப் பெறுகிறது. இதுவே காலையில் விஸ்வரூப தரிசனத்தின்போது, உடற்பிணியும் உள்ளப் பிணியும் நீக்கும் அருமருந்தாக அன்பர்களுக்கு வழங்கப்படுகிறது.

 மலையிலுள்ள ஷண்முகர், உற்சவரான சின்னக் குமரர் ஆகியோருக்கும் நைவேத்யமும் தீப ஆராதனையும் செய்யப்படுகிறது.இராக்கால பூஜையின் போது ஆண்டவரை விருத்தனாக(வயோதிகன்) அலங்காரம் செய்வர்.

 பள்ளியறை

இராக்கால தீபாராதனைக்குப் பின்னர் சுவாமியைப் பள்ளியறைக்குத் தங்க அல்லது வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளச் செய்வார்கள். திருக்கோயிலின் அன்றாட வரவு செலவு படிக்கப்படுகிறது.

 காலையில் திறக்கப்படும் கோயில் திருவாயில், இரவு பள்ளியறைக்கு முன் மூடப்படுவதில்லை. பள்ளியறையில் சுவாமியை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சல் பாட்டு, தாலாட்டுப் பாடல்கள் பாடப்படுகின்றன.

மகாதீபாராதனை பைரவ பூஜை இவற்றிற்குப் பிறகு சந்நதி திருக்காப்பிடப்படுகிறது.

எண்ணற்ற பக்தர்கள் அதிகாலை முதல் மலை ஏறி இறைவனை வழிபட்டு அருள்பெறுகின்றனர்.
மாலை வேளையில் தங்கத்தேரில் இறைவன் வலம் வருவதைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

பழநி ஆண்டிக்கு அரோஹரா எனும் பக்தர்கள் கோஷம் மலையையே அதிரவைப்பது போல் கேட்கிறது. ஆண்டவன் சின்னக்குமரன் தங்கமயில் ஏறி உள்திருச்சுற்றில் வளம் வருவதும் பின்னர் தங்கத்தேர் ஏறி வெளித்திருச்சுற்றில் வலம் வருகின்ற திருக்காட்சி அனைவரும் கண்டு இன்புறவேண்டிய காட்சியாகும்.

தமிழகத்தில் முதன் முதலாகப் பழநி திருக்கோயிலில்தான் தங்கரதம் செய்யப்பட்டு சுவாமி புறப்பாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்களின் வசதியை முன்னிட்டு ஒரே நாளில் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் சுவாமி புறப்பாடு கட்டணம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

கி.பி.1300ம் ஆண்டில் பாண்டிய அரசன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் தன் பெயரால் ஒரு சிறப்பு சந்தி பூஜை ஏற்பாடு செய்தான். அதற்கு 'அவணி வேந்த ராமன் சந்தி' என்று பெயர். இந்தப் பூஜைக்கு வேண்டிய பிரசாதங்களுக்காக ஒரு ஊரையே தானமாகக் கொடுத்தான் என்பதிலிருந்து பண்டைக்காலத்தில் பழநி கோயில் எவ்வளவு புகழ் பெற்றிருந்தது என்பதும், மன்னன் கோயில் மீது எத்தனை அன்பு வைத்திருந்தான் என்பதும் விளங்குகிறது. 

மூன்று கால சந்நதிகளிலும் பூஜையும் மகாபூஜையும் நடக்கவும், திருஅமுது, திருநந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் முதலியவைகளுக்காகவும் வைகாவூர் நாட்டு ரவிமங்கலம் தானமாகக் கொடுக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டுகளில் உள்ளது.

முருகப் பெருமானை நீராட்டுவதற்கான தீர்த்தம் எடுப்பதற்காகத் திருக்குளம் ஒன்று இருந்தது பற்றியும், அது ‘சுப்ரமண்ய சுவாமி திருமஞ்சனக் குளம்’என்று அழைக்கப்பட்டது என்பதையும் கல்வெட்டு எண் 2 குறிப்பிடுகிறது. 

மலையின் தெற்கு பாகத்தில் திருமஞ்சனப்படி என்ற சிறிய படி வழிப்பாதை இருக்கிறது. இங்கு ஒரு தனிக்குளம் இருந்திருக்கலாம்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.