நம்மை பொறுத்தவரை இறைவனை வழிபடுவது என்பது கைகூப்பி வணங்கும் ஒரு முறை என்பதாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. ஒருவர் ஆலயம் சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியோ இறைவனை வணங்குவதையே வழிபாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவனை வழிபாடு செய்வதில் ஒன்பது வகையிலான வழிமுறைகளை நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதில் எந்த முறை நமக்கு சரிப்பட்டு வருகிறதோ, அந்த வழியில் சென்று இறைவனை வழிபட வேண்டும். அப்போது இறைவனை வெகு விரைவில் நாம் சென்றடைய முடியும். அது சரி… அது என்ன ஒன்பது வழிமுறைகள்… வாருங்கள்.. தெரிந்து கொள்வோம்.
கேட்டல் :
இந்த வழிபாட்டு முறைக்கு நாம் எதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ‘கற்றிலன் ஆயினும் கேட்க..’ என்றும், ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்றும் திருவள்ளுவர் கூறுவதை பின்பற்றினாலே போதுமானது. இறை வனைப் பற்றிய பெருமைகளையும், புகழையும் கேட்டு, அவன் வசம் ஆகும் முறையே இந்த ‘கேட்டல்’ வழிபாட்டு முறை. ஆகையால் இறை வனைப் பற்றி பலவற் றையும் அறிந்தவர்கள் சொல் வதைக் கேட்டால் போதும். கேட்பது என்பது எளிது என்று யாரும் நினைத்து விட வேண் டாம். ஒருவர் சொல்வதை பொறுமையாக, தெளிவாக கேட்டு அறிந்து கொள்வதற் கும் மனம் ஒத்துழைக்க வேண்டும். முக்கியமாக அறிந் தவர்கள் சொல்லும் நல்லதைக் கேட்க முயற்சிக்க வேண்டும். அதனால் தான் வழிபாட்டு முறைகளில், ‘கேட்டல்’ முதலிடம் பெறுகிறது.
பாடுதல் :
கேட்டல் வழிபாட்டிற்கு அடுத்தபடியாக இருப்பது, இறைவனைப் பாடி வழிபடும் முறை. இறைவனைப் பாடி வழி படுதல் அடுத்ததாகச் சொல் லப்படுகிறது. ‘பாடும் பணியில் என்னை பணித்தருள்வாய்’ என்கிறார் குமரகுருபர சுவாமிகள். அந்த அளவுக்கு இறைவனை பாடும் வழிபாட்டு முறை சக்தி மிக்கதாக இருக்கிறது. இசையால் இறைவனை ஈர்த்து, அவன் திருவடிகளை அடைந்தவர்கள் நம் நாட்டில் அநேகம் பேர் இருந்திருக்கிறார்கள். அப்படி தங்களின் பாடலால், இறைவனை தன் வசம் ஈர்த்தவர்களில் நால்வர் எனப்படும், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்கியமானவர்கள். பக்தியோடு இணைந்த பாடலுக்கு எப்போதும் மிகப்பெரிய சக்தி உண்டு. அப்படிப்பட்ட பாடலின் வாயிலாக நாமும் இறைவனைப் பாடி அவனருளைப் பெறுவோம்.
நினைத்தல் :
இறை வழிபாட்டில் மூன்றாவது நிலை, ‘நினைத்தல்’. இறை சிந்தனையில் மூழ்குவது என்பது நினைக்கும் போது சாதாரணமாகத் தோன்றும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஒரு விஷயத்தை நினைக்கும் போது, ஓராயிரம் சிந்தனைகள் வந்து, முதலில் நினைத்ததை புறந்தள்ளி விட்டு நம் மனதை ஆட்கொள்ள ஆரம்பிப்பதை பலரும் உணர்ந்திருப்பார்கள். சில வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து இறைவனை நினைக்க முடிவதே பெரிய விஷயம்தான். அப்படி இருக்கையில் ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும் போதும், மனதின் உள்ளே இறைவனை நினைத்துக் கொண்டிருப்பது என்பது மேலான ஒரு நிலைதானே. மனதைக் கட்டுப்படுத்தி இடைவிடாது இறைவனை நினைப்பது நிச்சயமாக மேலான ஒரு வழிபாட்டு முறை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
திருவடிதொழல் :
இந்த வழிபாட்டு முறையைப் பற்றி, திருவள்ளுவரும் அழ காக சொல்லியிருக்கிறார். ‘அறமாக விளங்கும் இறை வனின் திருவடிகளை வணங்கு பவர்களைத் தவிர, மற்றவர் களால் பொருள், இன்பம் என்னும் பிறவிப்பெருங் கடலைக் கடக்க முடியாது’ என்பது வள்ளுவனின் வாக்கு. ஆம்.. நாம் கடந்து போக வேண்டிய இன்ப துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கைக் கடலில், நம்மை மூழ்கவிடாமல் காப்பது இறைவனின் திரு வடித்தொழுதல் மட்டும் தான். ஆகை யால் திருவடிதொழல் என்னும் வழிபாட்டு முறை முக்கியத் துவம் பெறுகிறது. எந்த நிலையில் எப்படிப்பட்ட துன் பங்கள் வந்தபோதிலும் இறைவனையே தொழுது பேறு பெற்ற நாயன்மார்கள் இதற்குச் சான்றாக விளங்குகிறார்கள்.
பூஜித்தல் :
ஐந்தாவது வழிபாட்டு முறையாக இருக்கிறது இறைவனை பூஜை, நைவேத்தியம் செய்து வழிபடும் முறை. இப்படித்தான் இறைவனை பூஜித்து வழிபட வேண்டும் என்று ஆகம விதிகளும், வழிபாட்டு முறைகளையும் வகுத்து வைத்திருந்தாலும், எப்படி பூஜித்தாலும் அந்த வழிபாட்டில் பக்தியும், அன்பும் இருந்தால் இறைவன் மனமுவந்து அதை ஏற்றுக்கொள்வான் என்பது ஆன்மிகப் பாதையில் கரைகண்டவர்கள் சொல்லும் உண்மை.
அதற்கு சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் இருக்கும் உதாரணம் தான் கண்ணப்ப நாயனார். ஆகம விதிப்படி பூஜைகளை செய்து வந்தவர்கள் மத்தியில், இறைவன் மேலான அன்பால் அவருக்கு பன்றி இறைச்சியையும், தன் கண்ணையும் கொடுத்ததின் மூலமாக இறைவனை பூஜிப்பதற்கு அன்பு ஒன்றே போதும் என்று நிரூபணம் செய்தவர்.
வணங்குதல் :
இறைவனை வழிபடுவதில் அடுத்த கட்டம் இது. பொதுவாக பலரும் பூஜித்தல், வணங்குதல், திருவடிதொழல் ஆகிய மூன்று வழிபாட்டுக்கும் பெரிய வித்தியாசம் என்ன இருக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால் இருக்கிறது. இவை மூன்றுக்கும் மிக நுண்ணிய நூலிழை வித்தியாசமே உண்டு. இங்கு நாம் பார்க்கும் ‘வணங்குதல்’ என்ற வழிபாட்டு முறையை ‘தலைவணங்குதல்’ என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
திருவடிதொழல் மற்றும் பூஜித்தலில் பக்தி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் வணங்குதலில் அகங்காரத்தை களைவது என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ‘நான்’ என்ற ஆணவம் தான் அனைத்துக்கும் மூலகாரணம். அந்த ‘நான்’ என்ற அகந்தையை ஒழித்து, ‘எல்லாம் நீ’ என்ற பணிவுடன் இறைவனை தலைவணங்கும் முறை இது. ‘நான்’ என்னும் அகங்காரத்தை கைவிட்டால் ஒழிய, இறைவனின் அருள் நமக்கு கிடைக்க வழியே இல்லை என்பதைச் சொல்வதே இந்த வழிபாட்டின் சிறப்பம்சம்.
தொண்டு :
தன்னலம் கருதாது, புகழுக்காகவும், லாபத்திற் காகவும் அல்லாது, இறைவனுக்கும், இறைவன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் இயலாதவர்களுக் கும் தொண்டு செய்வதும் கூட இறைவனை வழிபடும் ஒரு மார்க்கமாகவே பார்க்கப்படுகிறது. தன்னலமற்ற தொண்டுக்கு சிறந்த உதாரணமாக ஆன்மிக மார்க்கமாக தொண்டாற்றிய திருநாவுக்கரசரையும், சமூக மார்க்கமாக தொண்டாற்றிய அன்னை தெரசாவையும் குறிப்பிடலாம். தள்ளாத வயதிலும் கூட கோவில்கள் தோறும் சென்று தொண்டு புரிந்தவர் அப்பர் என்னும் திருநாவுக்கரசர். அதே போல் கொல் கத்தா வீதிகளில் அவதிப்பட்ட தொழுநோயாளி களுக்கெல்லாம் சேவை செய்து மகிழ்ந்தவர் அன்னை தெரசா. இறைவனை மகிழ்விக்க இதுபோன்ற சேவைகளைவிட உயர்வானது எதுவும் இல்லை.
சிநேகம் :
இறைவனை சிநேகத்துடனும், அன்பாகவும் பார்க்க முடிவது ஆன்மிகத்தின் தனிச்சிறப்பு தன்மையாகவே சொல்லலாம். அன்பும், காதலும் இறைவன் மீது ஏற் படுவது ஒரு வித வழிபாடாகவே கருதப்படுகிறது. மீரா, ராதை போன்றவர்கள் இந்த அன்பின் எல்லையால் இறைவனை கட்டிப்போட்டவர்கள். அதைத் தான் ‘அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே’ என்கிறார் வள்ளலார் என்னும் ராமலிங்க அடிகளார். இறைவன் என்னும் மலையை எப்படி அன்பு என்னும் பிடியில் கட் டுவது? அது கற்பனை என்று தோன்றலாம். ஆனால் அது சாத்தியம் என்கிறது இந்த வழிபாட்டு முறை.
ஒப்படைத்தல் :
கடைசி வழிபாட்டு முறை இது. உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்வது இதன் சிறப்பம்சம். இது மகான்களால் மட்டுமே ஆகிற காரியம் என்றாலும், ஆன்ம நிவேதனம் ஆன்மிகத்தின் உச்சநிலையாகக் கருதப்படுகிறது. தத்துவ வேதாந்த சாரமாகக்கூடச் சொல்லப்படுகிறது இந்த உயர்வுநிலை.
இறைவனை அடையவும், அவனது பேரருளைப் பெறவும் இந்த ஒன்பது வழிபாட்டு முறைகளும் உங்களுக்கு உதவும். இதில் அவரவரர் இயல்புக்கு ஏற்ற வழியைத் தேர்ந்தெடுத்து அதைக் கடைப்பிடிக்கலாம்.
திருச்சிற்றம்பலம்
புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினர்
மனமுடை அடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்
இனமுடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை அடிகள் தம் வளநகர் சேறையே.
இந்தப் பதிகத்தின் விளக்கம் :
வனங்களிலுள்ள பல நறுமலர்களைப் பறித்து, தூவித் தொழுகின்ற அடியவர்களுக்கும் மனமொன்றி உருகி, தியானம் செய்யும் அடியவர்களுக்கும் துயர் களைந்து அருள் புரியும் நியமமுடைய சிவபெருமான் கழுத்தில் கட்டப்படும் மணியும், அரசிலை போன்ற அணியும் ஒளிர, மிக்க கோபமுடைய ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவராய் வீற்றிருந்து அருளும் வளமான நகரம் திருச்சேறை என்கிறார் ஞானசம்பந்தர்..
புரிதரு சடையினர் புலியதள அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா
வரிதரு வளையினர் அவர் அவர் மகிழ்தர மனைதொறும்
திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.
இந்தப் பதிகத்துக்கான விளக்கம்:
சிவபெருமான் முறுக்குண்ட சடா முடியை உடையவர். புலியின் தோலை இடுப்பில் கட்டியவர். நீறுபூத்த நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றினைப் பூசிக் கொண்டிருப்பவர். ரிஷப வாகனத்தில் ஏறி வலம் வருபவர். சரிந்த வரிகளையுடைய வளையல்களை அணிந்த, பெருமையுடைய மகளிர் மகிழும்படி வீடுகள்தோறும் திரிந்து பிச்சையேற்கும் பிட்சாடனர். அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்து அருளும் வளமை மிக்க நகரம் திருச்சேறை என்று போற்றுகிறார்.
துடிபடும் இடையுடை மடவரல் உடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை அரவினர்
பொடிபடும் உருவினர் புலியுரி பொலிதரும் அரையினர்
செடிபடு சடைமுடி அடிகள் தம் வளநகர் சேறையே.
இந்தப் பதிகத்துக்கான விளக்கம்:
உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமா தேவியை, சிவபெருமான் தம்மில் ஒரு பாகமாகக் கொண்டவர். இடி முழக்கம் போன்ற குரலுடைய ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவர். படமெடுத்தாடும் பாம்பையே அணிந்தவர். திருவெண்ணீறு அணிந்தவர். இடையில் புலித் தோலாடை அணிந்தவர். செடி போன்று அடர்த்தியான சடாமுடி கொண்டவர். அப்பேர்ப்பட்ட பெருமைமிகுந்த சிவனார், வீற்றிருந்து அருளும் நகரம் திருச்சேறை.
அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில்
மந்தர வரிசிலை அதன் இடை அரவு அரிவாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர்
செந்தழல் நிறமுடை அடிகள் தம் வளநகர் சேறையே.
இந்தப் பதிகத்துக்கான விளக்கம் :
சிவபெருமான் ஆகாயத்தில் சுற்றித் திரிந்த திரிபுரங்களை நொடிப்பொழுதில் மலையை வில்லாகவும், அதனிடை வாசுகி எனும் பாம்பை நாணாகவும் பூட்டியவர். திருமால், வாயு, அக்கினி இவற்றை அம்பாகக் கொண்டு எய்து வெந்தழியுமாறு செய்த வீரமிக்கவர். தேக்கிய விடம் மணி போன்று விளங்கும் கண்டத்தைக் கொண்டவர். செந்தழல் போன்ற மேனியுடைய சிவனார் வீற்றிருக்கும் திருச்சேறை.
மத்தரம் உறு திறல் மறவர் தம் வடிவுகொடு உருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை அசைவு செய் பரிசினால்
அத்திரம் அருளும் நம் அடிகளது அணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
இந்தப் பதிகத்துக்கான விளக்கம்:
மந்தார மலை போன்ற வலிமையுடைய வேட்டுவ வடிவம் தாங்கி வந்து, பத்துப் பேர்களைச் சிறப்பாகக் கொண்ட விஜயனைப் பொருது தளரச்செய்து, அவன் கௌரவர்களைத் தோல்வியடையச் செய்யும் வண்ணம் பாசுபதம் எனும் அம்பைக் கொடுத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய வளமை மிக்க நகரம், அடர்ந்த சோலைகள் சூழப்பெற்ற திருச்சேறை என்று பாடிப் பரவுகிறார் ஞானசம்பந்தர்.
பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
வாடின படுதலை யிடுபலி யதுகொடு மகிழ்தரும்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
இந்தப் பதிகத்துக்கான விளக்கம்:
இறைவன் முறைப்படி வரிசையாக அரிய வேதங்களைப் பாடியருளியவர். ஐந்தொழில்களை ஆற்றுபவர். திருநடனம் புரிபவர். மலரும், பூஜைக்கு உரிய பிற பொருள்களும் கொண்டு உலகின் அடியவர்கள் போற்றித் துதிக்க அருள்செய்பவர். வாட்டமுற்ற பிரம்மனின் வறண்ட மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்பவர். அத்தகு பெருமை மிக்க சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகரம், திருச்சேறை.
கட்டுர மதுகொடு கயிலை நன்மலை நலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபதும் நெரிசெய்தார்
மட்டுர மலரடி அடியவர் தொழுதெழ அருள் செயும்
சிட்டர் தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
இந்தப் பதிகத்துக்கான விளக்கம்:
தன்னுடைய உறுதியான உடல் வலிமை கொண்டு கயிலை மலையைத் தன் மிகுதியான கரங்களால் பெயர்த்தெடுக்க முயன்ற கொடியவனான ராவணனின் உடலும், பெரிய தலைகள் பத்தும் நெரித்தவர் சிவபெருமான். அவருடைய நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை அடியவர்கள் தொழுது போற்ற அருள் செய்யும் நல்லியல்பு கொண்டவர். அவர் எழுந்தருளும் அற்புத நகரம் திருச்சேறை என்கிறார் ஞானசம்பந்தர்.
பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய அவர் அவர் அடியொடு முடியவை அறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவே ஒர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட அருளிய அவர் நகர் சேறையே.
இந்தப் பதிகத்துக்கான விளக்கம்:
திருமால் பன்றி உருவெடுத்தார். பிரம்மன் அன்னப்பறவை உருவெடுத்தார். இறைவனைக் காணமுயன்றனர். அவ்விருவரும் தன் அடியையும், முடியையும் அறியாவண்ணம் அவர்கள் நடுவே நெடிய நெருப்புப் பிழம்பாய்த் தோன்றி, ஓங்கி, அருளிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருச்சேறை.
துகடுறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்
விகடம் அது உறு சிறுமொழி அவை நலமில வினவிடல்
முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகுற முதுநதி
திகழ்தரு சடைமுடி அடிகள் தம் வளநகர் சேறையே.
இந்தப் பதிகத்துக்கான விளக்கம்:
அழுக்கு மிகுந்த ஆடையை உடுத்திக் கொள்வோரும் தோற்றத்தாலேயே இவர்கள் அமணர்கள் என்று கண்டு கொள்ளத்தக்க வடிவுடையவர்களும் குறும்புத்தனமாகக் கூறும் அற்ப மொழிகள் நன்மை தராது. எனவே அவற்றைக் கேட்காமல், அரும்பையொத்த இளம்பிறைச் சந்திரனையும், பாம்பையும், கங்கையையும் அழகுற அணிந்த சடைமுடியுடைய அடிகளான சிவனார் வீற்றிருக்கும் திருச்சேறை என்கிறார் ஞானசம்பந்தப் பெருமான்.
’’திருஞானசம்பந்தப் பெருமான், உருகி உருகிப் பாடியுள்ள இந்தப் பதிகங்களை மனமுருகப் பாடினால், இல்லறத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். உத்தியோகம் நிலைக்கப் பெறும். வழக்கின் மூலமாக வரவேண்டிய சொத்து இத்யாதிகள் வந்துசேரும்’’ என்கிறார் சுப்ரமணிய சாஸ்திரிகள்.
திருச்சேறை சிவனாரின் இந்தப் பதிகங்களை பூஜையறையில் அமர்ந்து, ஆத்மார்த்தமாகப் பாடி வந்தால், சிவனாருக்கு வில்வம் சார்த்தி வேண்டிக்கொண்டால், கடன் தொல்லைகள் அனைத்தும் தீரும். வீட்டின் தரித்திர நிலை விலகும். ஐஸ்வர்யம் குடிகொள்ளச் செய்வார் சார பரமேஸ்வரர்