காமத்துப்பால் பகுதி 2 - காளகேய காவியத் தொடர்
இந்திர சபையில் நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பமானது . தேவ காணமும் கந்தர்வ காணமும் முழங்க கிண்ணரர்கள் தாளமும் இசைக் கருவிகளும் வாசிக்க ஆடல் மங்கை அப்சரஸ் மேனகை யின் நாட்டியம் ஆரம்பமானது .
தேவேந்திரனை போற்றிப் புகழ்ந்தும் சிருங்கார சிற்றின்ப ரசங்களை சேர்த்தும் பாடப்பட்ட பாடலுக்கு ஏற்ப மேனகை அரங்கம் அதிரும்படி ஆடிக் கொண்டிருந்தாள் . அவளுடன் இணைந்து ஆடல் அப்சரஸ்கள் சிலரும் நாட்டியமாடினர் .
மேனகையின் அந்த அற்புதமான நாட்டியத்தின் நடுவே இந்திரன் அவளது அங்க அசைவுகளையும் ஆடைகளற்ற பகுதிகளில் அதாவது அவளது இடைப் பகுதியையும் கழுத்துப் பகுதியையும் கச்சையில் மூடப்பட்டிருந்த கலசங்களின் செழிப்பையும் கண்டு அளவிலா ஆனந்தமும் மோகமும் கொண்டு நாட்டியத்திற்கேற்ப தனது கைகளால் தாளமிடுவதை போல் சைகை செய்து கொண்டு இருந்தான் .
அப்சரஸ்களில் மென்மையானவள் மேன்மையானவள் மேனகை . அவளது அழகில் மயங்கிய விஸ்வாமித்திரர் தவத்தை கலைத்து சுகத்தை விரும்பி அவளுடன் கூடிக் களித்து சகுந்தலை என்ற மகளை பெற்றெடுத்தார் என்றால் அவளது அழகும் வசீகரமும் வர்ணிக்க வார்த்தைகள் போதாது .
அன்று இந்திர சபையை அலங்கரித்தவர்களில் காஷ்யப ரிஷியும் ஒருவர் . தமது தவ வாழ்வில் இந்திரியத்தை அடக்கி கட்டுப்படுத்தி மணியாக்கி அந்த மணியின் உட்புற ஒளியில் முதிர்ந்த அவரது உடலும் முகமும் தேஜஸ் மிகுந்து காணப்பட்டது .
சிற்றின்பத்தை மறந்து பேரின்பத்தை (பரம்பொருளை) நாடியவர் கண்களுக்கு அப்சரஸ் மேனகை யின் நாட்டியமும் அவளது அபார அழகும் அவரது சிந்தையை சிதறச் செய்தது .
சபையோர் அனைவரின் கவனமும் நாட்டியத்தின் ஆடல் பாடல்களில் அகமகிழ்ந்து ஆர்வமுடன் கண்டு களித்து கொண்டு இருந்தனர் . மேனகையின் மோகத் தாக்குதலுக்கு உள்ளானார் காஷ்யபர் .
அரம்பையர்கள் அப்சரஸ்கள் இந்திரனின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அந்தப்புர பணிப்பெண்கள் இந்திராணியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாமல் குறிப்பாக காலாஞ்சனாவின் மீதான தனது ஏக்கம் தீராக் காதலாகவே மாறியதாலும் இந்திரன் மீதான இந்திராணியின் ஐயத்தால் காலாஞ்சனாவை கடுமையாக பணித்து ஏவல் செய்ய பழக்கி இருந்தாள் இந்திராணி .
அமரர்களுக்கு ஆலோசனை கூறுகின்ற தலைமைப் பதவியான தேவகுரு பதவியை தனக்கு தராமல் பிரகஸ்பதிக்கு தந்ததில் தேவர்கள் மீதும் தேவகுரு மீதும் கடுமையான வெறுப்பும் கோபமும் கொண்ட சுக்கிராச்சாரியார் அமரர்களுக்கு எதிராக இனி நான் செயல்படுவேன் அமரர்களை அழிக்க பாடுபடுவேன் என்று கர்ஜித்து சபதமேற்கொண்டு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார் .
ரிஷி சுக்கிராச்சாரியாரை நாடி காலாஞ்சனா அவரது ஆசிரமத்திற்கு சென்றாள் . தியானத்தில் இருந்த சுக்கிரர் யோக நிஷ்டையில் காலாஞ்சனாவையும் அவளது எண்ணத்தையும் அறிந்து கொண்டார் .
சிறிது நேர தாமதத்திற்கு பிறகு கண்களை திறந்த சுக்கிராச்சாரியார் பெண்ணே நீ யார் என்பதையும் உனது எண்ணத்தையும் யோக நிஷ்டையில் அறிந்து கொண்டேன் .
உன் எண்ணம் ஈடேற வாழ்த்தி உனக்கு ஒரு வழியை காண்பிக்கிறேன் . தற்சமயம் காஷ்யப முனிவர் தேவ லோகத்தில் தான் இருக்கிறார் . நீ அவரை அணுகினால் உனது எண்ணம் நிச்சயம் ஈடேறும் .
தனிமையில் அவரை சந்தித்து சபலப்படுத்து உன்னோடு சல்லாபத்தில் ஈடுபடுத்து . அதன்பிறகு உனது கோரிக்கையை வரமாக கேட்டு பெற்றுக் கொள் .
உனது வயிற்றில் உருவாகும் கருவானது அமரர்களுக்கு எதிராக உருவெடுப்பான் . தேவ லோகத்தை தேவேந்திரனை ஆட்டி வைப்பான் என்று கூறி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் .
அவரை வணங்கி அவ்விடம் விட்டு காஷ்யபரை தேடி சென்றாள் காலாஞ்சனா .
தொடரும் ....
எழுத்தாக்கம் : விக்கிரமாதித்தன் புருஷோத்பாபு
பின் குறிப்பு :: காலாஞ்சனா .... ஒரு சில குறிப்புகளில் அவளது பெயர் காளகா என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
காளகாவின் வயிற்றில் தோன்றியதால் காளகேயர்கள் என்று அழைக்கப்பட்டனர் .