எப்படி இருக்கிற பார்வதி?
கேட்டவளின் முகம் பார்த்த பார்வதி நல்லா இருக்கேன், புன்னகையுடன் சொன்னாள். நீங்க?
எனக்கென்ன, ம்.. புன்னகையை முயற்சி செய்து முகத்தில் வரவழைத்து, நல்லாத்தான் இருக்கேன், சமாளித்தாள் கமலா..
வாங்க, வெயிலுக்கு குளிர்பானம் ஏதாவது சாப்பிடலாம் அழைத்தாள் பார்வதி..
வேண்டாம், வேண்டாம் எனக்கு சளி பிடிக்கும் உனக்கு தெரியுமே.
பரவாயில்லை, சூடா காப்பியாவது குடிக்கலாம் மீண்டும் வற்புறுத்தினாள் பார்வதி.
இல்லை பார்வதி பத்து நிமிசம்தான் நடந்தா வீடு வந்திடும், உன்னை எப்பவாவது பார்க்க முடியுமான்னு நினைச்சுக்குவேன், நல்ல வேளை வழியிலேயே பார்த்துட்டேன், வரட்டுமா.
இருங்க போலாம், கமலத்தின் கைகளை பலமாக பற்றிக்கொண்ட பார்வதி, நீங்க எதுவும் சாப்பிடலையின்னாலும் பரவாயில்லை, உள்ளே வந்து உட்காருங்க, அந்த கடைக்குள் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று உட்கார வைத்தாள்.
வேண்டாம், வேண்டாம், சொன்னாலும் பாரவதியுடன் உள்ளே சென்று உட்கார்ந்தாள்.
இவளிடம் கேட்காமலேயே சர்வரிடம் ஆர்டர் செய்தாள், இரண்டு காப்பி, அப்படியே சூடா ஏதாவது இருந்தா கொண்டு வாங்க.
கமலா சலித்தாள், என்ன பார்வதி வேண்டாமுன்னு சொன்னாலும் கேட்கமாட்டேங்கறே,
இருவரும் சர்வர் கொண்டு வந்த இரண்டிரண்டு வடையை சாப்பிட்டு முடிவதற்குள் சர்வர் கொண்டு வந்த காப்பியை வாங்கி ருசித்தனர்.
பணம் கொடுப்பதற்காக பர்சை திறந்த கமலத்தை சட்டென தடுத்து பார்வதியே சாப்பிட்டதற்கான பணத்தை கொடுத்தாள்.
கமலா தர்மசங்கடத்துடன் நீ சொன்னா கேட்கவே மாட்டே, சலித்து கொண்டே வெளியே வந்தாள்.
ஆட்டோ, ஆட்டோ கைதட்ட பதறியபடி கமலா எதுக்கு ஆட்டோ, பத்து நிமிசம்தான் போயிடுவேன்.
பேசாம இருங்க, ஆட்டோ அருகில் வர இவங்களை பூங்காவனம் நகர்ல கொண்டு போய் விடணும், எவ்வளவு கேட்பீங்க?
ஐம்பது ரூபாய் ஆகும், அவர் சொல்லி முடிக்குமுன் பார்வதி சட்டென தன் கையில் இருந்த அம்பது ரூபாயை எடுத்து ஆட்டோ டிரைவரிடம் கொடுத்து பத்திரமா இறக்கி விட்டுடுங்க.
ஆட்டோ பறந்தது, கமலம் பார்வதிக்கு கையை காட்டி விடை பெற்றாலும் மனசு அசெளகர்யமாக இருந்தது. சொன்னால் கேட்கமாட்டாள் இந்த பார்வதி.
ஏம்மா காலையிலதான உன் கிட்டே நூறு ரூபாய் கொடுத்தேன், அதுக்குள்ள செலவாயிடுச்சுன்னு சொல்றே மகன் அலுத்தபடி பணம் எடுத்து கொடுத்தான்.
நான் வேலை செஞ்சுகிட்டிருந்த முதலாளியம்மாவை பார்த்துட்டேண்டா, அவங்களுக்கு காப்பி வாங்கி கொடுத்து ஆட்டோவுல ஏத்தி அனுப்பிச்சேன், அதனால செலவாயிடுச்சு.
ஏம்மா முதலாளியம்மாங்கறே, அவங்களுக்கு நீ செலவு பண்ணியிருக்கே..
பெருமூச்சுடன் அவங்க வீட்டுல நான் சமையல்காரியா இருபது வருசம் இருந்தேண்டா, அந்த ஐயா போன பின்னாடி பசங்களும் புள்ளைங்களும் சொத்தை எல்லாம் பிரிச்சு கொண்டு போயிட்டாங்க.
அந்தம்மாவுக்கு இப்ப எந்த வருமானம் இல்லாம கஷ்டப்படறாங்க.
என்னம்மா நீ பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்றே. அவங்க இதை எல்லாம் உங்கிட்டே சொன்னாங்களா?
அவங்களா..!
தன்மானத்தை விட்டு யார்கிட்டயும் எதுவும் சொல்லமாட்டாங்க, நானே எல்லாம் தெரிஞ்சுகிட்டதுதான்.
இப்ப கூட எனக்கு நல்லா தெரியும், அவங்க எதுவும் சாப்பிட்டு இருக்கமாட்டாங்க.
ஐயோ நீ ஏதாவது உதவி பண்ணலாமில்லையா?
அப்படி எல்லாம் செய்ய ஒத்துக்கமாட்டாங்க, அவங்க மதிப்பு குறையாம அப்ப அப்ப உதவி பண்ணிடறேன், அவ்வளவுதான்.