Breaking News :

Sunday, February 23
.

போகி பண்டிகை என்ன செய்தால்?


தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப் படுகிறது. பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப் படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்‘ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. 

 

போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்களை அப்புறப் படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

 

போகி பண்டிகைக்கும் இந்திர தேவன் (மேகம் மற்றும் மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

 

முன்னதாக, தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

 

கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார்.

 

அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப் பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 

மூன்று நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.

 

பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன், கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார்.

 

இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.

இதையட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். 

 

பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. 

 

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.