Breaking News :

Thursday, November 21
.

ஆனித் திருமஞ்சனம் ஏன்?


திருமஞ்சனம் என பேச்சு வாக்கில் சொல்லப்படும் சொல் ஆனது திரு + மெய் + அஞ்சனம் என்ற மூன்று சொற்பதங்களின் கூட்டணி ஆகும்.
திரு என்றால் புனிதமான, மேலான      என்ற ஆர்த்தம் ஆகும். இங்கு திரு என்ற சொல் இறைவனை குறிக்கின்றது.

மெய் என்றால் உடம்பு அல்லது மேனி என்ற அர்த்தம் ஆகும்.
அஞ்சனம் என்றால் வாசனை திரவியங்கள், வாசனை எண்ணெய் போன்றவற்றை பூசி அபிஷேகம் செய்வது ஆகும்.

திரு என்ற மேலான இறைவனின் மெய் எனும் மேனிக்கு அஞ்சனம் எனும் அபிஷேகம் செய்வது திருமெய்யஞ்சனம் என அழைக்கப் பட்ட வார்த்தை தற்போது பேச்சு வழக்கில் திருமஞ்சனம் என அழைக்கப் படுகிறது.

திருமஞ்சனம் என்பது தெய்வத்தை நீராட்டி குளிர்விக்கும் நிகழ்வாகும்.
திருமஞ்சனம் என்ற வார்த்தைக்கு மகா அபிஷேகம் எனவும் பொருள் கொள்ளலாம்.

அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்தாலும் ஆனி மாதத்திலும்  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் துவக்க மாதம் ஆனி மாதமாகும். பன்னிரு மாதங்களில்  மீக நீண்ட பகல் பொழுதை கொண்டதுவும் ஆனி மாதம் ஆகும்.

கோடை முடிந்து சாரல் மழை துவங்கும் மாதம் ஆனி மாதம் ஆகும்.
வெயில் முடிந்து சாரல் துவங்கும் ஆனி மாதத்தில் சீதோஷ்ண மாறுபாட்டால் உஷ்ண சம்பந்தமான நோய்கள் உடலில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சிவலிங்கமாய் வீற்றிருக்கும்  சிவபெருமானுக்கு தினந்தோறும் அபிஷேக அலங்கார ஆராதனைகள் சிவாலயங்களில் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் ஆடலரசன் ஆன நடராஜ பெருமானுக்கு ஆண்டில் ஆறு முறை மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும்.

சிவபெருமானின் 64 வகையான மூர்த்தி வடிவங்களில் ஒன்று திருத்தாண்டவம் எனும் நடனம் புரிகின்ற நடராஜர் வடிவம் ஆகும்.

ஒற்றைக்காலை தரையில் ஊன்றி, அனலாய் தகிக்கும் அக்கினி சட்டியை கையில் ஏந்தி, உடலின் நீர்ச்சத்தை உறியும் சுடலையின் சூடான வெண்ணிற சாம்பல் எனும் திருநீற்றை மேனி எங்கும் பூசி காற்று புகாத புலித்தோலை அணிந்து  இருக்கும்  நடராஜர் திருமேனி ஆனது கோடை கால வெப்பத்தில் அனலாய் தகிக்கும்.

கண்டத்தில் தங்கி இருக்கும் ஆலஹால விஷத்தின் வீரியத்தால் வெம்மையால் கண்கள் சிவந்து, கழுத்து  நீலமாகிய நீலகண்டன் முழுக்க முழுக்க நெருப்பை விட வெம்மையான உஷ்ணத்தால் தகிப்பார்.

அம்பலத்தரசன், அரவம் அணிந்தோன், காளை வாகனன், கறைக்கண்டன், கங்காதரன், பிறை சூடி, மஹாதேவர் என பல்வேறு பெயர்களால் பக்தர்களால் பரவசத்தோடு அழைக்கப்படும் சிவபெருமானின் உஷ்ண ஆதிக்கத்தை தணிக்க
வருடத்தில் ஆறு தடவை திருமஞ்சனம் எனும் மஹா அபிஷேகம் நடராஜர் ஆலயங்களில் நடைபெறும்.

ஒரு நாளில் வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் ஆகிய ஆறு பொழுதுகள் இருக்கின்றன.

ஆறு கால பூஜையானது ஆண்டவனுக்கு ஆலயங்களில் அன்று நாட்டை ஆண்ட அரசர்களால் நடத்தப்பட்டு வந்தன.

ஆலயங்களை இழுத்து மூடுவதும், ஆலயங்களை இடிப்பதுவும், ஆலய சொத்துக்களை களவாடுவதும்  இன்றைய ஆள்பவர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டவன் பார்த்து கொள்(ல்)வான் அவர்களை..

பதிவை வேறு பக்கம் திருப்பாமல் திருமஞ்சன சிறப்பை பற்றி மட்டும்  நாம் பார்ப்போம்.

சித்திரையில் ஓணம் முதல்; சீர் ஆனி உத்தரமாம்
சத்ததனு ஆதிரையும் சார்வாகும் - பத்தி வளர்
மாசி அரி கன்னி மருவு சதுர்த்தசி மன்றீசர் அபிடேக தினமாம்.
என சொல்லியவாறு வருடத்தில் ஈசனாகிய நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் ஆறு திருமஞ்சன அபிஷேக விழாக்களில் மிக சிறப்பான அபிஷேக விழாக்கள் இரண்டு ஆகும்.

ஒன்று மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர தினத்திலும் மற்றொன்று ஆனி மாத உத்திர நட்சத்திரத் தினத்தில் நடக்கும் திருமஞ்சன நிகழ்வுகள் ஆகும்.

மார்கழி திருவாதிரையில் நடக்கும் மகா அபிஷேகத்தை ஆருத்ரா தரிசனம் என்றும், ஆனி உத்திரத்தன்று நடைபெறும் அபிஷேகத்தை ஆனி திருமஞ்சனம் என அழைப்பார்கள்.

மார்கழி திருவாதிரை அன்று  சிவனாருக்கு  ஆறு கால வேளையின் முதல் காலப் பொழுதான வைகறை எனும் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.

மாசி மாத சதுர்த்தசி திதியில் திருமஞ்சன அபிஷேகம் கால சந்தி பூஜை எப்படும் காலை வேளையில் நடைபெறும்.

சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் வரும் திருமஞ்சன அபிஷேகம் உச்சிகால  வேளையில் நடைபெறும்.

ஆனி மாத உத்திரத்தில் வரும் திருமஞ்சன அபிஷேகம் சாயரட்சை பூஜை வேளையான மாலை நேரத்தில் நடைபெறும்.

ஆவணி மாத சதுர்த்தசி திதியில் நடைபெறும் திருமஞ்சன அபிஷேகம் இரவு நேரத்தில் நடைபெறும்.

புரட்டாசி மாத சதுர்த்தசி திதியில் திருமஞ்சன அபிஷேகம் அர்த்த ஜாம நேரத்தில் நடைபெறும்.

ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திர நாள் அன்று நடராஜப் பெருமானுக்கு சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வது ஆனித்திருமஞ்சனம் என அழைக்கப் படுகிறது.

பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர், களபம் என இன்னும் பல என மொத்தம் பதினாறு வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு உமாபதியான சிவனின் வெம்மையை தணிக்க திருமஞ்சனம் செய்கின்றனர்.

ஆனித் திருமஞ்சன அபிஷேகத்தை முதன் முதலில் நடராஜப் பெருமானுக்கு செய்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவர் ஆவார்.

உலகாளும் நாதனின் உடலும் உள்ளமும் குளிர்ந்தால் உலகம் உய்வடையும்.

நல்ல முறையில் சாரல் மழை பொழிந்து நாடும் காடும் செழிக்க ஆனித் திருமஞ்சன அபிஷேகத்தை அம்மையப்பனுக்கு நடத்துகின்றனர்.

ஆடல்வல்லானுக்கு நடத்தப்படும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தை கண்டால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள்.

தில்லையம்பலத்தானுக்கு நடத்தப்படும் திருமஞ்சன அபிஷேக தரிசனத்தை ஆண்கள் கண்டால்  மனதில் தைரியமும், உடல் பலமும், செல்வ வளமும் கூடும்.

புனிதமான இந்த ஆனி உத்திர நாளில் தான் சிவபெருமான் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் சிவ உபதேசம் செய்தார்.

புனிதமான இந்த ஆனித் திருமஞ்சன திருநாளில் சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டு சிவனருள் பெறுங்கள்
அனைவருக்கும் ஆனி திருமஞ்சன வாழ்த்துகள்.

ஆடல்வல்லான் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
ஓம் நமச்சிவாய...

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.