Breaking News :

Sunday, February 23
.

ஆறுகால பூஜை பலன்கள்?


சைவ சமயக் கோவில்களில் ஆறுகால நித்திய பூஜை அல்லது ஆறு கால பூஜை என்பது ஆகம முறைப்படி தினம் நடைபெறுகின்ற ஆறு பூசைகளாகும்.

ஆறு கால நித்திய பூஜை

1. உசத்கால பூஜை
முதல் பூசையான இது. சூரிய உதயத்திற்கு முன்பே நடத்தப்படுகிறது. ஆகமத்தின்படி சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் நடத்தப்பட வேண்டும். இந்தப் பூசையின் போது சிவாச்சாரியார், பைரவர் சந்நதியில் வைக்கப்பட்டிருக்கும் சாவியை பூஜை செய்து எடுத்துக் கொள்வார். மங்கள வாத்தியத்துடன் பள்ளியறை சென்று திருப்பள்ளி எழுச்சி ஓதுவார். பின்பு பெருமான் சிலையை மட்டும் மேள வாத்தியத்துடன் கோவிலை வலம் வந்து மூலவரான லிங்கத்தின் முன்பு வைத்து பூசை நடைபெறும். உற்சவர் சிலையில் இருந்த பெருமான், லிங்க வடிவான மூலவர் சிலைக்கு செல்வதாக நம்பிக்கை. இந்தப் பூசை அபிசேக ஆராதனையோடு முடிவடைகிறது.

2. காலசந்தி பூஜை
ஆகமத்தின்படி காலசந்தி சூரிய உதயத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள் நடைபெற வேண்டும். பூசையின் போது சூரியன், விநாயகருக்கு, துவாரத்திற்கு பூசை நடைபெறுகிறது. பின்பு மூலவர், பரிவாத தெய்வங்களுக்கு அர்ச்சனை நடைபெற்று பஞ்சக்ருத்யம் கூறி நித்ய பலியுடன் பூசை முடிவடைகிறது.

3. உச்சிக்கால பூஜை
இப்பூசை நண்பகலில் நடத்தப்படுகிறது. விநாயகர் பூசை முடிந்ததும், துவாரபாலகரை வழிபட்டு மூலவரான இலிங்கத்திற்கு அலங்காரம், ஆவரணம், தூபம், தீபம், நைவேத்தியம் போன்றவை நடைபெறுகின்றன. அந்தப் பூசைப் பொருட்கள் மூலவரிடமிருந்து அகற்றப்பட்டு சண்டேசரிடம் வைத்து வழிபடப்படுகிறது.  
     
4. சாயரட்சை பூஜை
இந்தப் பூசையானது சூரியனின் மறைவுக்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். விநாயகர் பூசை, மூலவரான இலிங்கத்திற்கு அபிசேகம், அலங்காரம் செய்து தீபம், நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

5. சாயரட்சை இரண்டாம் கால பூஜை
விநாயகர் பூசை, மூலவருக்கு அபிசேக, ஆராதனை, தீபம், நைவேத்தியப் படையல் பூசை செய்யப்படுகிறது. பின்பு பரிவார தெய்வங்கள், நித்யாக்னி கார்யம், நித்யோத்சவ பலி ஆகிய பூசை நடைபெற்று சண்டேசுவர பூசையுடன் இரண்டாம் கால பூசை முடிவடைகிறது.

6. அர்த்தசாம பூஜை
மூலவருக்கு அபிசேகம், ஆராதனை முடிந்ததும், உற்சவ மூர்த்திகள் பள்ளியறைக்கு எடுத்துச் சென்று, அங்கு நறுமண மலர்கள், ஏலக்காய், இலவங்கம், வெற்றிலைப் பாக்கு வைத்து திரையிடப்படுகிறது. இதனை பள்ளியறை பூசை என்பர். பள்ளிறைப் பூசை முடிந்ததும் சண்டேசுவரர் பூசை நடைபெறுகிறது. பின்பு பைரவர் சந்நிதியில் சாவியை வைத்து பூசை நடைபெற்று அர்த்தசாம பூசை முடிவடைகிறது.

ஆறுகால பூஜை நடக்கும் நேர அட்டவணை
1. உஷத் காலம் – காலை 6:00 மணி
2. கால சந்தி – காலை 8:00 மணி
3. உச்சிக்காலம் – பகல் 12:00 மணி
4. சாய ரட்சை – மாலை 6:00 மணி
5. இராக்காலம் – இரவு 8:00 மணி
6. அர்த்த ஜாமம் – இரவு 10:00 மணி
உலகின் முதல்வனே அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையாரே உன்‌ மலர் பாதம்‌ சரணம் .
சிவாய நம சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என்‌ வரமே.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.